நடிகர் இளவரசு, தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையை துவங்கியவர். கடலோரக் கவிதைகள், முதல் மரியாதை படங்களில் ஒளிப்பதிவாளராக செயல்பட்டவர் இளவரசுதான். ஒரு கட்டத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
முதலில் சின்ன சின்ன கேரக்டர்களில் தோன்றியவர், பின் குணச்சித்திர நடிகராகி ரசிகர்களின் மனம்கவர்ந்த நடிகராக மாறிவிட்டார். பாஞ்சாலங்குறிச்சி படத்தில், மகாநதி ஷங்கருக்கு இளவரசு பின்னணி குரலும் பேசி இருப்பார். நடிகராக, டப்பிங் கலைஞராக இளவரசு பல படங்களில் தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
அறை எண் 305ல் கடவுள், மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக, சென்னை 28, இம்சை அரசன் 23ம் புலிகேசி, பாண்டி, கலகலப்பு, தவசி, லிங்கா என பல படங்களில் நடித்து, முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சில படங்களில் காமெடி நடிகராகவும் இளவரசு நடித்திருக்கிறார்.
குறிப்பாக தந்தை கேரக்டர்களில் இளவரசு நடிப்பு மிக சிறப்பாக இருக்கும். கலகலப்பு படத்தில் விமலுக்கு தந்தையாக நடித்திருப்பார். அதே போல் முத்துக்கு முத்தாக படத்தில், 5 மகன்களுக்கு தந்தையாக நடித்திருப்பார். ஆட்டோகிராப் படத்தில், ஆசிரியராகவும் நடித்திருப்பார். இளவரசு எந்த கேரக்டரில் நடித்தாலும், அவரது நடிப்பு அம்சமாகவே இருக்கும்.
இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ஒரு காட்சியில் இளவரசு செருப்பால் அடி வாங்குவது போன்ற ஒரு காட்சியில் இளவரசு நடித்திருக்கிறார். சினிமாவில் ஒரு முக்கிய இடத்தில் உள்ள நீங்கள், இவ்வளவு படங்களில் கவுரவமாக நடித்துவிட்டு, இந்த காட்சியில் நடிப்பதை தவிர்த்திருக்கலாமே என, சக நடிகர்கள் சிலர் கேட்டுள்ளனர்.
அதற்கு இளவரசு, நடிப்பு என்று வந்துவிட்டால், எல்லாவிதமான காட்சிகளிலும் நடிக்க வேண்டும். இப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்க சங்கடப்படக் கூடாது. அப்படி வருத்தப்பட்டு, அந்த காட்சியில் நடித்துவிட்டு சம்பளம் வாங்கினால், அந்த காசில் சாப்பிடும் சாப்பாடு செரிக்காது. செய்யும் தொழிலுக்கு உண்மையாக இருக்கணும், அதுதான் நியாயம் என்று கூறி, மற்றவர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் நடிகர் இளவரசு.





