கோலிவுட்டின் சிறந்த இயக்குநர் என்ற பெயர் எடுத்தவர் பாலுமகேந்திரா. அவரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சீனு ராமசாமி. பல வருடங்கள் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்த அவர் கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. அதனையடுத்து விஜய் சேதுபதியை வைத்து தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கினார்.
அந்தப் படம்தான் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. படம் மெகா ஹிட்டாகி விஜய் சேதுபதிக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதுமட்டுமின்றி படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதன் காரணமாக சீனு ராமசாமியும் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குநராக கோலிவுட்டில் அடையாளப்பட்டார் என்பதும் கவனிக்கத்தக்கது.
தொடர்ந்து அவர் இயக்கிய நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் உள்ளிட்ட படங்களும் பெரும் கவனம் ஈர்த்தன. குறிப்பாக அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான மாமனிதன் திரைப்படம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து பல விருதுகளையும் தட்டி சென்றது. விஜய் சேதுபதிக்கு எப்போதுமே ஃபேவரைட்டான இயக்குநர் என்றால் அது சீனு ராமசாமிதான்.
அவர் அடுத்ததாக ஜிவி பிரகாஷை வைத்து இடிமுழக்கம் என்ற படத்தை இயக்கிவருகிறார். கண்டிப்பாக இந்தப் படமும் கவனம் ஈர்க்கும் என்று திரைத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர். இதற்கிடையே விஷ்ணு விஷால் உள்ளிட்டோரை வைத்து அவர் இயக்கியிருக்கும் இடம் பொருள் ஏவல் படம் பல வருடங்களாக ரிலீஸுக்கு காத்திருக்கின்றது.
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி சீனு ராமசாமி மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் அதிர்ச்சி தரும் விதமாக அமைந்திருக்கின்றன. அவர் அளித்த பேட்டியில், “மனிஷா யாதவ் அறிமுகமான முதல் படத்திலேயே (ஆதலால் காதல் செய்வீர்) பாலியல் தொல்லைக்கு ஆளாகுபவராக நடித்திருப்பார். அதனையடுத்து அவருக்கு தொடர்ந்து அதேபோன்ற கதாபாத்திரங்களே கிடைத்தன. சினிமாவில் உள்ள பலரும் அவரை தவறாகவே அணுகினர்.
அவர்களில் ஒருவர்தான் சீனு ராமசாமி. இடம் பொருள் ஏவல் படத்திலும் மனிஷா யாதவ் நடித்தார். அந்தப் படத்துடைய ஷூட்டிங்கின்போது சீனு ராமசாமி கொடுத்த டார்ச்சர் சொல்லி மாளாது. அவர் கொடுத்த டார்ச்சர் காரணமாகத்தான் மனிஷா யாதவ் சினிமாவை விட்டே சில காலம் ஒதுங்கியிருண்டார். அந்தப் படம் தாமதமாக காரணமே அந்த விவகாரம்தான். அதற்கான ஆதாரம் எல்லாம் என்னிடம் இருக்கிறது” என்றார். அவரது இந்தக் குற்றச்சாட்டு புதிய பஞ்சாயத்தை தமிழ் சினிமாவில் ஆரம்பித்துவைத்திருக்கிறது.





