நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். கடந்த பிப்ரவரி 2ம் தேதி தனது அரசியல் வருகை மற்றும் கட்சியின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்த விஜய், ஆகஸ்ட் 22ம் தேதி கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தி, பனையூரில் உள்ள தலைமை கட்சி அலுவலகத்தில் கொடியேற்றினார். தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது என்ற கட்சி பாடலையும் வெளியிட்டார்.
தொடர்ந்து அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற கிராமத்தில் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்திக் காட்டினார். மாநாட்டில் தொடர்ந்து 48 நிமிடங்கள் தனது கட்சி கொள்கைகள், கோட்பாடுகள் குறித்தும் விஜய் ஆவேசமாக பேசினார். திமுகதான் என் அரசியல் எதிரி என்றும் பகிரங்கமாக அறிவித்தார்.
தொடர்ந்து தற்போது தளபதி 69 படத்தில் நடித்துவரும் விஜய், வரும் பிப்ரவரி இறுதிக்குள் இந்த படத்தை முடித்துவிட்டு கட்சி பணிகளில் முழு தீவிரம் காட்ட இருக்கிறார். இதுவரை 90 லட்சம் பேர் கட்சியில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குள் அதை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆளுங்கட்சியான திமுக படைபலம், பண பலம், அதிகார பலம், செல்வாக்கு என பாரம்பரியமாக அரசியல் தொழில் செய்துவரும் இந்த சூழ்நிலையில், நடிகர் விஜய் வருகிற 2026ம் ஆண்டில் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வது சாத்தியமா, திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், பாஜக, விசிக என பலமான கட்சிகள் உள்ள தொகுதிகளில் விஜய் என்ற பிராண்டு பெரிய அளவில் ஓட்டுகளை அள்ளித் தருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
விஜயுடன் கூட்டணி சேர வரும் கட்சிகளின் ஓட்டுவங்கி விஜய்க்கு பெரிய அளவில் உதவுமா, சினிமா நடிகராக மட்டுமே விஜய் பார்க்கும் ஒரு தரப்பு மக்கள், கமல்ஹாசனுக்கு தந்த அந்த இடத்தைதானே விஜய்க்கும் தருவார்கள் என்ற சந்தேகமும் உள்ளது. இந்த சூழலில் நடிகர் அஜீத்குமார், நடிகர் விஜய்க்கு ஆதரவு தர அதிக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. மேலும் அஜீத்குமாரின் மனைவி ஷாலினி, விஜய்க்கும் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறுகையில், நடிகர் விஜய், அஜீத்குமாரிடம் தனக்கு ஆதரவு கேட்க திட்டமிட்டுள்ளார். தனது சக நடிகரான விஜய், துணிச்சலாக அரசியலில் இறங்கி உள்ளதால் அஜீத்குமாரும் நிச்சயம் ஆதரவுக்கரம் நீட்டுவார். நேரடியாக, மறைமுகமாக அஜீத் ஆதரவு விஜய்க்கு நிச்சயமாக இருக்கும். அஜீத் அரசியலுக்கு வராததால், விஜய் வந்திருக்கிறாரே என்றும் அஜீத் ரசிகர்கள் விஜய்க்கு ஓட்டுப் போடுவார்கள், என்று அந்தணன் கூறியிருக்கிறார்.





