நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ரஜினி கமல் விஜய் வரிசையில் அடுத்து இருப்பது நடிகர் அஜீத்குமார்தான். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரங்களில் நடிகர் அஜீத்குமாரும் ஒருவர். இவரது கால்ஷீட்டுக்காக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தவமாக காத்திருக்கின்றனர்.
ஆனால் நடிகர் விஜய் அரசியல்வாதியாகி விட்ட நிலையில் ஜனநாயகன் படத்துடன் தனது சினிமா பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இந்த படத்தை முடித்த பின்பு அவர் வேறு படங்களில் நடிக்காமல், தவெக கட்சி பணிகளில் முழு கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயாராகி வருகிறார். விஜய்க்கு அரசியல் போல, அஜீத்குமார் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.
இந்த சூழலில் நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் சமீபத்தில் ரீலீஸாகி பெரிய வரவேற்பை பெறவில்லை. 16 நாட்களில் இதுவரை உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருக்கிறது. தொடர்ந்து அஜீத்குமார் திரிஷா நடித்துள்ள குட்பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்திருக்கிறார்.
நடிகர் அஜீத்குமார் இப்போது ஸ்பெயின் நாட்டில் வெனிஸ்லியா நகரில் நடந்து வரும் கார் பந்தயத்தில் கலந்துக்கொண்டுள்ளார். ஏற்கனவே துபாயில் நடந்த கார் ரேஸ் பயிற்சியின் போது அஜீத்குமார் கார் விபத்தில் சிக்கியது. அதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அடுத்து போர்ச்சுக்கல்லில் நடந்த கார் விபத்து குறித்தும் அஜீத்குமாரை பதிவிட்டு, நான் நலமாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
தற்போது ஸ்பெயின் நாட்டில் வெனிஸ்லியா நாட்டில் நடந்து வரும் கார் ரேஸில் அஜீத்குமார் பங்கேற்றார். அப்போது முன்னால் சென்ற காரை அஜீத்குமார் கார் முந்திச் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் 3 முறை பல்டி அடித்து பிறகு நின்றது. ஆனால் இந்த முறையும் அஜீத்குமார் எவ்வித காயமும் இல்லாமல் உயிர் தப்பினார்.
இப்படி அஜீத்குமார் அடிக்கடி விபத்தில் சிக்குவது அவரது ரசிகர்களை பதைபதைக்க செய்கிறது. சினிமாவுக்கு நடிக்க வந்த ஆரம்பத்தில் பைக் ரேஸ் ஒன்றில் அஜீத்குமார் பங்கேற்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் முதுகுதண்டுவடம் பகுதியில் பலத்த அடிபட்டு எலும்புகளில் சேதாரம் ஏற்பட்டது. ஒன்றரை ஆண்டுகள் படுக்கையில் இருந்த அஜீத்குமார் தீவிர சிகிச்சைக்கு பிறகுதான் உடல் நலம் தேறி நடிக்க ஆரம்பித்தார். அப்போதும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் அவள் வருவாளா போன்ற படங்களில் நடித்த போது, அதிக நேரம் நிற்க முடியாமல் முதுகுவலியால் அஜீத்குமார் மிகுந்த சிரமப்பட்டார். அதனால் அவர் கார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





