நடிகர் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கிய படம் கங்குவா. இந்த படம், சூர்யா சினிமா பயணத்தில் மிக முக்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு கஜினி போல, சிங்கம் போல இந்த படம் மிகப் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட சூர்யா படங்கள், போதிய வரவேற்பை பெறவில்லை, அதுவும் எதற்கும் துணிந்தவன், என்ஜிகே, தானா சேர்ந்த கூட்டம் படங்கள் பெரிய வெற்றி பெறவில்லை. ஜெய்பீம் படம் மட்டும் ஓரளவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படமாக அமைந்தது.
விஜய், சூர்யா இருவரும் ஒரே காலகட்டத்தில்தான் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆயினர். துவக்கத்தில் நேருக்கு நேர், பிரண்ட்ஸ் போன்ற படங்களில் விஜய், சூர்யா இருவரும் ஒன்றாக நடித்துள்ளனர். ஆனால் விஜய் அளவுக்கு சூர்யா பெரிய படங்களில் நடிக்கவும் இல்லை. அவர் படங்கள் பெரிய அளவில் இதுவரை பேசப்படவில்லை. இது சூர்யா ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது.
ஆனால், சூர்யா ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக இந்த கங்குவா படம், மிகப்பெரிய அளவில் பேசப்படும் பான் இந்தியா படமாக உருவாக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் இந்த படத்தின் சண்டை காட்சிகள் மட்டும் 30 நாட்கள் எடுக்கப்பட்டுள்ளது. அதனால், படத்தின் சண்டை காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும் என்றும், இந்த படத்தில் கலை இயக்குநருக்கு தேசிய விருது கிடைக்கவும் அதிக வாய்ப்புள்ளது.
இந்நிலையில், சரித்திர பின்னணியை கொண்ட பேன்டஸி படமாக கங்குவா எடுக்கப்பட்டுள்ளது. இதில் மிக வித்யாசமான கெட்டப்பில் சூர்யா நடித்திருக்கிறார். திஷா பதானி, பாபி தியோல், ஜெகபதி பாபு, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தை யுவி கிரியேஷன்ஸ், ஸ்டுடியோ ஸ்கிரீன் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் ஐமேக்ஸ் மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியீடு செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் மொத்தம் 38 மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படுவதாக,படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருக்கிறார்.





