நடிகர் அஜீத்குமார் இப்போது கார் ரேஸில் ஆர்வமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவரது அடுத்த படம் ஷூட்டிங் வரும் நவம்பரில் துவங்க உள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் டைரக்ட் செய்கிறார். ஏகே 64 என தற்காலிக பெயர் சூட்டப்பட்ட இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசிய நடிகர் அஜீத்குமார் கூறியதாவது, எந்த பின்புலமும் சிபாரிசும் இல்லாமல் சொந்த முயற்சியால் தமிழ் சினிமாவில் நுழைந்து ஒரு நடிகனாக நான் பயணித்தேன். எனக்கு பத்மபூஷன் விருது வழங்கிய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆதரவாக இருந்த அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானது தான். சினிமா என்னும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்களை நிறைவு செய்து இருக்கிறேன். நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு காரணம் ரசிகர்களின் அன்பும் ஆதரவும்தான். எண்ணில் அடங்காத தோல்வியும் வெற்றியும் அடைந்திருக்கிறேன்.
என்னுடைய இந்த வளர்ச்சிக்கு ரசிகர்களின் அன்பும் ஆதரவு மட்டுமே காரணம். அதனால் ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக அல்லது தவறாக எந்த சூழ்நிலையும் நான் பயன்படுத்த மாட்டேன். நான் பல சமயங்களில் வெளியே வராமலும் அதிகம் பேசாமலும் இருந்திருக்கலாம். அதே நேரத்தில் மோட்டார் பந்தயத்திலும் முழு கவனம் செலுத்தி ரசிகர்களை மகிழ்விக்க தவறியது இல்லை. ரசிகர்களையும் நாட்டையும் பெருமைப்படுத்துவேன் என நான் நம்புகிறேன்.
ரசிகர்களுக்கும் எனக்கும் நான் என்றென்றும் உண்மையாக இருக்க முயற்சி எடுப்பேன். அனைத்தையும் ஏற்றுக்கொண்டு இந்த 33 வருடங்கள் என்னை கொண்டாடியதற்கு நன்றி. காயங்களில் இருந்து மீண்டு வருதல், தோல்வி மற்றும் அமைதி என வாழ்க்கை என்னை பலவிதங்களில் சோதனைக்கு உள்ளாக்கியது. நான் தளர்ந்து போகவில்லை. முயற்சி செய்தேன் மீண்டும் வந்தேன். தொடர்ந்து முன்னேறுகிறேன்.
என் மோட்டார் ரேஸிங் கேரியருக்கும் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தேவை என்று நடிகர் அஜீத்குமார் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். நடிகர் விஜய் இப்போது ரசிகர்களின் ஆதரவை அன்பை பக்கபலமாக கொண்டு அரசியலில் குதித்திருக்கும் நிலையில், என்னுடைய சுயலாபத்துக்காக ரசிகர்களை பயன்படுத்திக் கொள்ள மாட்டேன் என்று நடிகர் அஜீத்குமார் பேசியிருப்பது நடிகர் விஜயை அவர் மறைமுகமாக குத்திகாட்டியிருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் இணையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,





