நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் துணிவு. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி, தைப்பொங்கல் பண்டிகை காலத்தில் வெளிவந்தது. எச் வினோத் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் ரிலீஸ் ஆன அதே நாளில், நடிகர் விஜய் நடித்த வாரிசு படமும் ரிலீஸ் ஆனது.
விஜய், அஜீத்குமார் நடித்த இந்த 2 படங்களுமே நல்ல வசூலை பெற்ற நிலையில் வாரிசு படத்தை காட்டிலும் துணிவு படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் அதிக பாராட்டைப் பெற்றது. இந்த படத்துக்கு பிறகு எட்டு மாதங்கள் எந்த படப்பிடிப்பிலும் அஜீத் கலந்துக்கொள்ளவில்லை. இந்த காலகட்டத்தில் அவரது தந்தை காலமானதால், சில மாதங்கள் அந்த சோகத்தில் அஜீத்குமார் இருந்தார்.
அதன்பிறகு நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், அஜீத்குமார் படத்தை இயக்குவதாக இருந்த நிலையில், அவர் சொன்ன கதை பிடிக்கவில்லை என, அவரை நிராகரித்துவிட்டு அஜீத்குமார் மகிழ் திருமேனியை அழைத்து, தன்னுடைய அடுத்த படத்தை இயக்க வாய்ப்புக் கொடுத்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் அஜர்பைஜானில் துவங்கிய படப்பிடிப்பு எட்டு மாதங்கள் கடந்தும் அப்படியே பாதியில் நிற்கிறது.
இதற்கிடையே லைகா புரடக்சன்ஸ் மீண்டும் பலகட்ட முயற்சிகளை செய்தும் விடாமுயற்சி படப்பிடிப்பை துவங்காமல் 4 மாதங்கள் விரயமாக்கிய நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார் அஜீத்குமார். எனினும் முதல் ஷெட்யூலை முடித்த அவர், மீண்டும் 40 நாட்கள் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக கால்ஷீட் தந்துள்ளார்.
இந்நிலையில், படத்தின் ஹீரோ அஜீத்குமார், டைரக்டர் திருமேனிக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப் போவதில்லை என்று தெரிய வந்துள்ளது. டைரக்டர் சொல்வதை ஹீரோ கேட்பதில்லை. ஹீரோ சொல்வதை டைரக்டர் கண்டுக்கொள்வதில்லை என்ற நிலை நீடிக்கிறது. தயாரிப்பு, படக்குழு, சக நடிகர், நடிகையர் கால்ஷீட், குறிப்பாக அஜீத்குமார் தரும் டார்ச்சர் என மகிழ்திருமேனி பயங்கர அப்செட்டில் இருக்கிறார்.
இப்போது, முதல்கட்டமாக அஜர்பைஜானில் 18 நாட்கள் விடாமுயற்சி ஷூட்டிங் நடக்கும் நிலையில், அங்கு கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி எடுக்கப்பட உள்ளது. ஆனால் சென்னையில் செட் போட்டு அந்த சண்டைக்காட்சியை எடுங்கள். நான் அஜர்பைஜான் வர முடியாது என மறுத்திருக்கிறார் அஜீத்குமார். இதனால் சென்னையில் செட் போடுவார்களா, மாட்டார்களா என்ற குழப்பத்தில் மீண்டும் விடாமுயற்சி ஷூட்டிங் நடக்குமா என்பதே பெரிய கேள்வியாக நீடிக்கிறது.





