நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் நடிக்க வந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அவரும் நடிகர் விஜயும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில்தான் சினிமாவில் அறிமுகமாகினர். ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே என்ற ஒரு படத்தில் இருவரும் நண்பர்களாக இணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.
ரஜினி கமல் போலலே விஜய் அஜீத்குமார் இருவரும் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக ஒரு கட்டத்தில் மாறினார்கள். விஜய் ரசிகர்கள் அஜீத் ரசிகர்கள் என இரு பிரிவினர் உருவாகி அவர்களின் புதிய படங்கள் ரிலீஸ் ஆன போது போட்டி போட்டுக்கொண்டனர்.
ஆனால் இப்போது அந்த போட்டிக்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. ஏனென்றால் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி தமிழக அரசியல் களத்தில் தீவிரமாக இருந்து வருகிறார். நடிகர் அஜீத்குமார் பைக் ரேஸ் கார் ரேஸ் ரைபிள் சுடுதல் என விளையாட்டு துறையில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார்.
கடந்தாண்டில் விடாமுயற்சி குட்பேட் அக்லி என்ற 2 படங்கள் அஜீத்குமார் நடிப்பில் வெளியானது. அதன்பிறகு அவர் தனது 64வது படத்தில் நடிக்காமல் 2025ம் ஆண்டு முழுவதும் கார் ரேஸில் முழு கவனம் செலுத்தினார். இந்த 2026ம் ஆண்டிலும் 3 மாதங்கள் ஆன நிலையில் ஏகே 64 படப்பிடிப்பு துவங்குவதற்கான அறிகுறியே இல்லை.
இந்த மார்ச் மாதம் துவங்கி வருகிற 2027ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை கார் ரேஸில் மீண்டும் அஜீத்குமார் பங்கேற்க இருப்பதாகவும் அதன்பிறகு தான் ஏகே 64 படப்பிடிப்பு என்றும் ஒரு தகவல் வெளியாகி ஏகே ரசிகர்களை வெறுப்படைய செய்துள்ளது. இந்த சூழ்நிலையில் நடிகர் அஜீத்குமார் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். இது இன்னும் ரசிகர்களை அதிக குழப்பமும் எரிச்சலும் அடைய செய்திருக்கிறது.
அஜீத்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் எல்எல்சி என்ற பெயரில் என்ற புதிய நிறுவனத்தை பிலிம் சேம்பரில் அவர் பதிவு செய்திருக்கிறார். இதற்காக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் அதாவது பிலிம் சேம்பரில் ரூ. 2.56 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தி தன்னை ஆயுட்கால உறுப்பினராகவும் பதிவு செய்திருக்கிறார். அப்படி என்றால் அஜீத்குமார் இனி நடிக்கவே மாட்டாரா என்ற குழப்பத்தில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.





