எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் ஊர் மெச்சும்படியாக சிறப்பாக உழைத்தாலும் வாய்ப்பு என்கிற ஒன்று கிடைத்தால் மட்டுமே அவரால் பிரகாசிக்க முடியும். சினிமாவில் எவ்வளவோ திறமையான கலைஞர்கள் இருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத ஒரு சூழலில் அவர்கள் வெளிச்சத்துக்கே வர முடியாமல் போய் விடுகிறது.
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் காமெடி கேரக்டர்களில் நடித்து வந்தவர் அப்புகுட்டி. குறிப்பாக குள்ளநரிக்கூட்டம் வீரம் வெந்து தணிந்தது காடு சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் அப்புக்குட்டி நடிப்பு அதிக கவனம் பெற்றதாக இருந்தது. இதில் வெந்து தணிந்தது காடு படத்தில் வில்லனாக அவர் நடித்திருந்தார்.
மேலும் அழகர்சாமியின் குதிரை என்ற படத்தில் கதையின் நாயகனாக அப்புக்குட்டி நடித்திருந்தார். இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த துணை நடிகர் தேசிய விருதும் கிடைத்தது. ஆனால் அந்த படத்திற்குப் பிறகு பல படங்களில் அவர் நடித்தார். அதில் நாயகனாக நடித்த சில படங்கள் வெளிவந்தும் வெற்றி பெறவில்லை. பல படங்கள் இன்னும் வெளிவராமல் முடங்கி கிடக்கிறது.
இதுகுறித்து நடிகர் அப்புக்குட்டி சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, அழகர்சாமியின் குதிரை படத்துக்கு பிறகு காமெடியனாக நடிக்கிறதா ஹீரோவாக நடிக்கிறதா என்கிற குழப்பம் எனக்கு இருந்தது. என்னால் உறுதியான முடிவெடுக்க முடியவில்லை.
அதனால் கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது தான் சரி என்று முடிவு செய்து தொடர்ந்து படங்களில் நடித்தேன். தேசிய விருது கிடைத்ததால் விருது கதைகளுடன்தான் என்னை தேடி வருகிறார்கள். வாழ்க விவசாயி ஜீவகாருண்யம் அ கன்னியப்பன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் போன்ற படங்களில் அப்படியான கதைகள் தான் இருந்தன.
விருதுகள் வாங்குவது பெரிய சந்தோஷம் தான். அதைவிட காமெடி ஹீரோவாக பெயர் வாங்கவே விரும்புகிறேன். அப்படி யாரும் என்னை பயன்படுத்த முன்வரவில்லையே என்கிற ஆதங்கம் இருக்கிறது. இயக்குனர் சுசீந்திரன் சார் மாதிரி என் நடிப்பை முழுசாக வெளிக்கொண்டு வருகிற ஒரு இயக்குனர் வருவார் என்று நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று நடிகர் அப்புக்குட்டி அதில் கூறியிருக்கிறார்.





