தமிழ் சினிமாவில் 1990களில் பல சூப்பர் ஹிட் படங்களை தந்தவர் நடிகர் அர்ஜூன். நடிகராக மட்டுமின்றி இயக்குனர் தயாரிப்பாளர் திரைக்கதை ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூன் கூறியதாவது, முதலில் ஜென்டில்மேன் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்றுதான் கூறினேன்.
ஏனென்றால் அப்போது சினிமா இன்டஸ்ட்ரி மீது நான் ரொம்பவும் கோபமாக இருந்தேன். அதற்கு முன்பாக நான் சேவகன் என்ற படத்தை டைரக்ட் செய்தேன். பிறகு பிரதாப் என்ற படத்தை டைரக்ட் செய்தேன். அப்போது அந்த படங்களை உருவாக்க நான் மிகவும் கஷ்டப்பட்டேன். அந்த நேரத்தில் எனக்கு யாருமே உதவ முன் வரவில்லை.
தயாரிப்பாளர்கள் தரப்பிலும் இயக்குனர்கள் தரப்பிலும் யாருமே எனக்கு உதவி செய்யவில்லை. இப்போது யோசித்து பார்த்தால் எதற்கு ஹெல்ப் பண்ணனும் என்றுதான் இருக்கு. அப்போ யாருக்கு மார்க்கெட் இருக்கு? ஓடுகிற குதிரை மேல தானே பணம் கட்டுவாங்க. ஓடாத குதிரை மேல பணம் கட்ட மாட்டாங்க. அது இப்போ புரியுது. அப்போ எனக்கு புரியலே. என்னடா இது கஷ்டத்துல இருக்கும் போது யாரும் நமக்கு ஹெல்ப் பண்ணலே, அதனால் இனிமேல் மத்த படங்களில் நடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.
நானே அடுத்த என் படங்களை இயக்கி நடிக்கவும் முடிவு செய்தேன். ஏனென்றால் என்னுடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வெற்றி பெற்று விட்டது. நானே வினியோகமும் பண்றேன். டைரக்ட் பண்றேன். கதை எழுதறேன். ரசிகர்களுக்கு பிடிச்சிருக்கு. கஷ்டத்தையே பார்த்தாச்சு.
இனிமே எனக்கு யாரும் வேண்டாம் என்ற வைராக்கியம் வந்து விட்டது. அதனால் இனி மற்ற படங்களில் நடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். அப்போ நிறைய படங்கள் என்னை கேட்டாங்க. நான் மாட்டேன்னு சொல்லிட்டேன். அந்த சூழ்நிலையில் இயக்குனர் ஷங்கர் என்னிடம் ஜென்டில்மேன் கதையை சொல்ல வந்தார். நான் பலமுறை கதை கேட்காமல் மறுத்து வந்தேன். ஆனால் ஒரு டெக்னீசியனாக ஷங்கர் மீண்டும் மீண்டும் என்னை கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை.
அதனால் கதையை கேட்டு விட்டு வேண்டாம் என்று மறுத்து விடலாம் என்ற முடிவில்தான் அவர் கதை சொல்ல சம்மதித்தேன். உட்லேண்ட்ஸ் ஹோட்டலில் இயக்குனர் ஷங்கர் என்னிடம் ஜென்டில்மேன் கதையை சொன்னார். அந்த கதையை கேட்ட பிறகு என்னால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று சொல்ல மனம் வரவில்லை. இவ்வளவு நல்ல கதையை எப்படி வேண்டாம் என்று சொல்றது. அதனால் ஓகே சூப்பர் சார். நாம் இந்த படத்தை பண்ணலாம் சார் என்று கூறிவிட்டேன் என்று நடிகர் அர்ஜூன் கூறியிருக்கிறார்.





