வம்சம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் அருள்நிதி. பசங்க திரைப்படத்திற்குப் பிறகு பாண்டியராஜ் இயக்கிய அந்த திரைப்படம் வெற்றி பெற்றது. சாதி பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், அருள்நிதி நல்ல ஒரு தொடக்கமாக அமைந்தது.
இந்த படத்திற்குப் பிறகு, அடுத்ததாக உதயன் என்னும் திரைப்படத்தில் நடித்தார் அருள்நிதி. ஆனால் அது ஓடவில்லை. பிறகு கதை தேர்வில் மிகத் தெளிவாக காய் நகர்த்த ஆரம்பித்தார் கதாநாயகன். இதில் அவருக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது மௌனகுரு.
சாந்தகுமார் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் அருள் நிதியின் நடிப்பு பாராட்டப்பட்டது. திரையரங்குகளில் அந்த திரைப்படம் வந்த போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக மௌனகுரு இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது. பிறகு தகராறு, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படங்களில் நடித்த அருள்நிதி அடுத்ததாக டிமான்டி காலனியில் நடித்தார்.
ஹாரர் ஜானரில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் பயமுறுத்தும் வகையில் எடுக்கப்பட, திரைக்கதையையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருந்ததால் டிமான்டி காலனியை மக்கள் கொண்டாடினார்கள். இதனைத் தொடர்ந்து ஆறாது சினம் திரைப்படமும், அருள் நிதியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
தொடர்ந்து இரவுக்கு ஆயிரம் கண்கள், களத்தில் சந்திப்போம், டி ப்ளாக், தேஜாவு, டைரி, திருவின் குரல் ஆகிய திரைப்படங்களில் அருள்நிதி நடித்தார். ஆனால் இந்த படங்கள் அனைத்தும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. கடைசியாக அவர் நடித்த கழுவேத்தி மூர்கன் திரைப்படம் மட்டும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு பலரும் குட் மார்க் கொடுத்தனர்.
தற்போது டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தில் அருள்நிதி நடித்து முடித்திருக்கும் சூழலில், அடுத்ததாக இயக்குனர் முத்தையா உடன் அவர் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முத்தையா தற்போது தனது மகனை வைத்து சுள்ளான் சேது எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன்பிறகு அவர் விக்ரம் பிரபு மற்றும் கௌதம் கார்த்திக்கை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அதன் வேலைகள் தாமதம் ஆவதால், அருள்நிதியை வைத்து படப்பிடிப்புக்கு செல்கிறார். ஆனால் இதுவும் கிராமத்து பின்னணியில் எடுக்கப்படும் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் கதி கலங்கி போய் உள்ளனர்.





