தமிழ் சினிமாவில் நடிகர்கள் மாதவன், ஷ்யாம், ஸ்ரீகாந்த் போல மற்றொரு சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் ஆர்யா. இதுவரை ஆர்யா நடித்த பல படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் அவரது படங்களையும் ரசித்துப் பார்க்க ரசிகர்கள் உள்ளனர். மிகவும் ஜாலியான கதைகளில் கலாட்டாவான அவரது நடிப்பு மிகவும் ரசிக்கும்படி இருந்தது.
குறிப்பாக பாஸ் என்கிற பாஸ்கரன், வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, டெடி, வட்டாரம், பட்டியல், ஓரம்போ, கலாபக் காதலன் போன்ற படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த பிறகு ஆர்யா நடிப்பில் படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.
காப்பான், இஞ்சி இடுப்பழகி, காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் போன்ற படங்கள் ஆர்யாவுக்கு பெரிய வெற்றியை தரவில்லை. அதுவும் கார்த்தி நடிப்பதாக இருந்து பிறகு ஆர்யா நடிப்பில் வெளிவந்த காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படம், இயக்குனர் முத்தையா படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படுதோல்விக்கு பிறகு ஆர்யாவுக்கு புதிய படங்கள் எதுவும் கமிட் ஆகவில்லை.
இந்நிலையில் நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ரன் பேபி ரன் படத்தின் இயக்குனர் ஜியோன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்யா இப்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய தகவல்கள் எதுவுமே இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இந்த புதிய படத்தை மார்க் ஆண்டனி, எனிமி ஆகிய படங்களை தயாரித்த வினோத் தயாரித்துள்ளார். லூசிபர் படத்தின் கதை ஆசிரியர் முரளி கோபி படத்துக்கு கதை எழுதியுள்ளார். அதனால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க துவங்கியுள்ளது.
கடந்த வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த திரைப்படம் 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவதாக தெரியவந்துள்ளது. இதுவரை நடிகர் ஆர்யா நடித்த படங்களில் இந்த படம் தான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்று கூறப்படுகிறது. ஆர்யா நடித்தவரும் இந்த படம் ராஜா காலத்து படமாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.





