இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தில் 5 இளைஞர்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் பரத். தொடர்ந்து காதல் எம்டன் மகன் நேபாளி சேவல் செல்லமே காளிதாஸ் கூடல் நகர் 4 ஸ்டூடன்ஸ் பொட்டு வெயில் பட்டியல் கண்டேன் காதலை பழனி திருத்தணி கடுகு விலங்கியல் 3ம் ஆண்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் சந்தியா நடித்த படம் காதல். கடந்த 2004ம் ஆண்டில் வெளியான இந்த படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. நடிகர் பரத்துக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. ஒர்க்ஷாப் தொழிலாளி பரத், பணக்கார வீட்டு பெண்ணை காதலித்து சென்னை ஓடிப்போவதுதான் கதை.
இறுதியில் நாயகியின் அப்பா இருவரையும் பிரித்து விடுவார். அதில் ஹீரோ மனநலம் பாதிக்கப்பட்டு பைத்தியமாகி ரோட்டில் பிச்சைக்காரனாக திரிவதுதான் படத்தின் கிளைமாக்ஸ். இந்த படமும் அதில் வரும் சென்னை இளைஞர்களின் மேன்சன் ரூம் வாழ்க்கையும் மிகவும் ரசிக்கும்படி எடுக்கப்பட்டு இருந்தது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் பரத் கூறியதாவது, மதுரை சிட்டியோட முக்கியமான ஏரியாவுல செம டிராபிக் ஆன இடத்தில் நடுரோட்டில் என்னை இறக்கி விட்டுட்டாங்க. போப்பா போய் நடி என்று சொல்லிட்டார் டைரக்டர். நானும் போய் நடிக்கிறேன்.
ஒரு கேமரா மொட்டை மாடியில் இருக்கு. இன்னொரு கேமரா மாருதி காரில் இருக்கு. ஆனா ரோல் பண்ணல. டைரக்டர் பாலாஜி சார் வெயிட் பண்றார். மக்கள் இவனை பைத்தியக்காரனா நம்புறாங்களா? யாராச்சும் கண்டுபிடிக்கறாங்களான்னு பார்க்கிறார். 40 நிமிஷம் அங்கேயே சுத்திட்டு இருக்கேன்.
அப்போ ஒரு அம்மா வந்து என் கையில பிச்சை போட்டுட்டு போனாங்க. அப்போ இருந்துதான் கேமரா ரோல் பண்ண ஆரம்பிச்சாங்க. கிட்டத்தட்ட அதுக்கு ரெண்டு மணி நேரம் ஆச்சு என்று நடிகர் பரத் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். சமீபத்தில் பரத் நடிப்பில் காளிதாஸ் 2 படம் வெளியானது. ஆனால் பெரிய வரவேற்பை பெறவில்லை.





