தமிழ் சினிமாவில் இப்போது நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான தேரே இஷ்க் மெய்ன் என்ற இந்தி திரைப்படம் 10 நாட்களில் ரூ. 130 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தொடர்ந்து நடிகர் தனுஷ் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
நடிகராக மட்டுமின்றி பாடகர் தயாரிப்பாளர் இயக்குனர் என பல பரிமாணங்களில் தனுஷ் தமிழ் சினிமாவில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது இயக்கத்தில் இதுவரை ப பாண்டி ராயன் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை என 4 படங்கள் வெளியாகி உள்ளது. இதில் ராயன் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது.
நடிகர் தனுஷூடன் தொடரி என்ற படத்தில் ஜோடியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். கடந்தாண்டு டிசம்பரில் அவர் காதல் திருமணம் செய்துக்கொண்டார். தனது நீண்ட கால நண்பர் ஆண்டனி தட்டில் என்பவரை அவர் கரம்பிடித்தார், இவர்களது திருமணம் கோவாவில் நடந்தது. இப்போது கீர்த்தி சுரேஷ் நடித்த ரிவால்வர் ரீட்டா என்ற படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி ஆங்கில படத்தில் நடித்திருக்கிறார். இந்தியிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் அடையாளமும் இருந்து வருகிறது. அதனால் அவரிடம் ஒரு முக்கிய கேள்வியை கேட்டதாக சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார்.
இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியதாவது ஒருமுறை நான் தனுஷ் கிட்ட பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது சார் நீங்க ஹாலிவுட் வரைக்கும் போயிட்டீங்க. நீங்கள் சினிமாவில் கடந்து வந்த பாதைகளில் இருந்து ஹாலிவுட் வரைக்கும் வந்த அனுபவத்தை ஒரு புத்தகமா எழுதலாம் தானே என்று கேட்டேன்.
அதற்கு தனுஷ் உடனே மறுத்துவிட்டார். கீர்த்தி நாம புத்தகம் எழுதிட்டோம்னா நாம் எல்லாத்தையும் சாதிச்ச மாதிரி ஆயிடும். புத்தகம் எழுதுகிற அளவுக்கு நாம ஒண்ணும் சாதிக்கலே அப்படி என்று வெளிப்படையாக சொன்னார். அவரே அப்படி சொல்லும் போது, அப்போ நாம கத்துக்க வேண்டியது விஷயம் ரொம்ப இருக்கு என்று நான் தெரிஞ்சுகிட்டேன் என்று அந்த நேர்காணலில் நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார்.





