“எதிர் நீச்சல்” சீரியலின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர் ஜி.மாரிமுத்து. மனதில் பட்டத்தை மிகவும் துணிச்சலாக பேசக்கூடியவரான இவர் தனது தொடக்க காலகட்டத்தில் சென்னைக்கு வந்து சினிமாவில் சேரவேண்டும் என பல இயக்குனர்களின் அலுவலகங்களின் படிகளில் ஏறி இறங்கிருக்கிறார். வறுமையில் வாடியிருக்கிறார்.
வெறுமனே தேனீர் மட்டுமே அருந்தி வாழ்ந்த காலங்கள் உண்டு என ஒரு பேட்டியில் கூட கூறியிருந்தார். எனினும் அவர் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு வசந்த், மணிரத்னம், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.
அதனை தொடர்ந்து “கண்ணும் கண்ணும்”, “புலிவால்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய மாரிமுத்து, அதன் பின் பல திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில் கூட “ஜெயிலர்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கமல்ஹாசனின் “இந்தியன் 2” திரைப்படத்தில் கூட ஒரு மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.
ஜி.மாரிமுத்து பல பேட்டிகளில் மிகவும் தைரியமாக தனது கருத்தை முன் வைத்துள்ளார். இதனால் அவருக்கு பல எதிர்ப்புகளும் கிளம்பியது. அவர் ஒரு நிகழ்ச்சியில் கடவுளை குறித்தும் ஜோசியத்தை குறித்தும் பேசியது பலரின் கோபத்தை கிளறியது. மேலும் ஒரு பேட்டியில் “திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் நடனமாட்டக்கூடாது” என கூறியதும் பெரும் விமர்சனங்களை எழுப்பியது.
எனினும் அவர் வசனம் பேசும் பாணியும், அவரது யதார்த்த நடிப்பும் பலரையும் கவர்ந்தது. “எதிர்நீச்சல்” என்ற சீரியலே இவரை நம்பித்தான் ஓடிக்கொண்டிருந்தது என்று கூட சொல்லலாம். அந்தளவுக்கு ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் மாரிமுத்து வாழ்ந்திருப்பார். இவ்வாறு ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகரான மாரிமுத்து நம்மை விட்டு பிரிந்துப்போனார். இனி அவர் ரசிகர்களின் நினைவுகளில் என்றும் வாழ்ந்துகொண்டிருப்பார்.





