தமிழ் சினிமாவை பொருத்தவரை ரஜினிகாந்த் எப்படியோ அப்படிதான் கமல்ஹாசனும் ஒரு உச்ச நட்சத்திர நடிகராக இருந்து வருகிறார். 5 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்து அறிமுகமான சிறுவன் கமல்ஹாசன் தொடர்ந்து பாலும் பழமும், ஆனந்தஜோதி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.
எனினும் இளைஞராக அவர் முதலி்ல நடித்த கே பாலச்சந்தர் இயக்கிய அரங்கேற்றம். அதன்பின்பு தொடர்ந்த கே பாலசந்தர் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை வரவேற்பை பெற்றார். அதே காலகட்டத்தில் கே பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த்.
தொடர்ந்து ரஜினி, கமல் தனித்தனியாக நடித்தனர். சில படங்களில் ஒன்றாக இணைந்தும் நடித்தனர். அப்படி இருவரும் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் இணைந்து நடித்த படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையிலும், அவர்களது சம்பளம் உயரவில்லை. தயாரிப்பாளர்கள் கணிசமாக லாபமடைந்தனர்.
இதையடுத்து, இருவரும் சேர்ந்து நடித்தால் வளர்ச்சி இருக்காது; தனித்தனி பாதையில் பயணிப்போம் என, இனி படங்களில் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தனர். அதன்பிறகு 40 ஆண்டுகளாக இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்காமல் இருந்து வருகின்றனர். ஆனால் இருவரும் சேர்ந்து நடிக்கும் கதை இருந்தால் கண்டிப்பாக நடிப்போம் என்றும் இருவரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன் மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் கட்சியை கமல்ஹாசன் துவங்கினார். அவரும் தனது கட்சிக்காகவும், தனக்கான அங்கீகாரத்துக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறார். ஆனால், ஒரு நடிகராக அவரை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள், ஒரு கட்சித் தலைவராக அங்கீகரிக்கவில்லை. எம்பி, எம்எல்ஏ என ஒரு பதவியை கூட அவரது கட்சியால் பெற முடியவில்லை.
இந்திய பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் 3 முறை தேசிய விருது பெற்ற, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருக்கு அழைப்பில்லை. காரணம், திமுக கூட்டணியில் அவர் இணைந்ததுதான். ஒரு ராஜ்யசபா எம்பி பதவிக்காக, திமுக கூட்டணிக்கு கமல் பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




