பா ரஞ்சித் இயக்கத்தில் அட்டக்கத்தி படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் தினேஷ். முதல் படத்திலேயே இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. அதனால் அட்டக்கத்தி தினேஷ் என்று அழைக்கப்பட்டார். இந்த படத்தை தொடர்ந்து ஒரு நாள் கூத்து தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் குக்கூ விசாரணை அண்ணனுக்கு ஜே என பல படங்களில் நடித்தார்.
எனினும் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கடந்தாண்டில் வெளியான லப்பர் பந்து படம் பெரிய அளவில் தினேஷூக்கு பெயர் வாங்கி கொடுத்தது. இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் ரசிகராக கெத்து என்ற பெயரில் பூமாலை என்ற கேரக்டரில் அவர் நடித்திருந்தார். நீ பொட்டு வெச்ச தங்க குடம் பாடலும் பெரிய அளவில் இந்த படத்தில் வரவேற்பை பெற்றது.
அட்டக்கத்தி என அழைக்கப்பட்டு வந்த நடிகர் தினேஷ் லப்பர் பந்து படத்தில் நடித்த பிறகு கெத்து தினேஷ் என்று அழைக்கப்படுகிறார். இந்த படத்தில் கதாநாயகியின் அப்பா கேரக்டரில் அவரது அழுத்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதே நேரத்தில் கதாநாயகனுடன் அவர் காட்டும் ஈகோவும் ரசிக்கும்படி இருந்தது.
அத்துடன் படத்தில் தனது மனைவி யசோதாவுடன் அவர் கொள்ளும் ஊடல் காட்சிகளும், மனைவியை பிரிந்த நிலையில் அவரது ஏக்கத்தில் காட்டும் மன வருத்தமும் படத்தில் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. பல காட்சிகளில் அந்த கேரக்டராகவே கெத்து தினேஷ் வாழ்ந்திருந்தார்.
லப்பர் பந்து படத்தின் அபார வெற்றிக்கு பிறகு பல படங்களில் கெத்து தினேஷை கமிட் செய்ய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வருகின்றனர். எனினும் தனக்கு தகுதியான நல்ல கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் முடிவில் அவர் இருக்கிறார். ஏனெனில் மிகச் சிறந்த நடிகராக இருந்தும் அவரை தமிழ் சினிமா இயக்குனர்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை.
அதனால் லப்பர் பந்து தந்த அபார வெளிச்சத்துக்கு பிறகு தினேஷ் வெகு கவனமாக தனது திரை பயணத்தை தொடர திட்டமிட்டுள்ளார். இதற்கு முன்பு வரை ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த தினேஷ், இப்போது அவரது சம்பளத்தை ரூ. 8 கோடியாக உயர்த்தியுள்ளார். சிரிப்பே வரவழைக்காத காமெடி நடிகர்களே 3 கோடி 5 கோடி என சம்பளம் வாங்கும் நிலையில், கெத்து தினேஷ் போன்ற மிக திறமையான நடிகர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்குவதில் தவறில்லை என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.





