நேற்று மத்திய அரசு 71வது தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்தது. இதில் இந்தியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்பி வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்தை கௌரவிப்பதன் மூலம் தேசிய விருதுகள் நடுவர் குழு சங்பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு கதைக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம் மற்றும் எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளாவுக்கு இந்த முடிவு மிகப்பெரிய அவமானத்தை தந்துள்ளது. மலையாளிகள் மட்டுமல்ல ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் அரசியலமைப்பு மதிப்புகளை பாதுகாக்க தங்கள் குரலை எழுப்ப வேண்டும் என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ஆடுஜீவிதம் படத்திற்கு ஒரு தேசிய விருது கூட அறிவிக்கப்படவில்லை என்பது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. குறிப்பாக லூசிபர் படத்தின் 2ம் பாகமாக எம்புரான் படத்தில் குஜராத் கலவரத்தை விமர்சிக்கும் விதமாக காட்சிகள் இடம் பெற்றதற்கு இந்துத்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
எம்புரான் படத்தை நடிகர் பிருத்விராஜ் இயக்கியிருந்தார். ஆகவே இதன் காரணமாக தான் நடிகர் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்த ஆடு ஜீவிதம் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் ஆஸ்கர் விருதுக்கு தகுதியான படம் என்று ரசிகர்களால் விமர்சிக்கப்பட்ட ஆடுஜீவிதம் படத்துக்கு எந்த விதத்திலும் ஒரு விருது கூட இல்லை என்பது பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.
ஆனால் மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது. டிசம்பர் 31ம் தேதிக்குள் தணிக்கை முடித்த படங்கள் மட்டுமே 2023 தேசிய விருதுகளுக்கு தகுதி பெறும். ஆனால் ஆடுஜீவிதம் திரைப்படம் 2024ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதியன்று தணிக்கை சான்றிதழ் பெற்றது. எனவே அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் 72 வது தேசிய விருதுகளில் ஆடுஜீவிதம் திரைப்படம் விருது பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.





