சினிமாவில் பெற்ற வெற்றிகளை பார்த்து உள்ளம் பூரித்துப் போய் அரசியலிலும் அதே செல்வாக்கும் வெற்றியும் வரவேற்பும் கிடைக்கும் என்று அரசியல் கட்சி துவங்கி காணாமல் போன பல நடிகர்கள் தமிழ் சினிமா வரலாற்றில் உண்டு. எம்ஜிஆர் விஜயகாந்த் 2 பேரை தவிர அரசியலுக்கு வந்த பல முன்னணி நடிகர்கள் கட்சி ஆரம்பித்த சுவடே தெரியாமல் இப்போதும் இருக்கின்றனர்.
அதில் ஒருவர்தான் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை பல ஆண்டுகளுக்கு முன்பே கடந்துவிட்ட கமல்ஹாசன் படைத்த திரை சாதனைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. சினிமாவில் ஒரு நடிப்பு கலைஞனாக அவர் தொட்ட உயரங்களை யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
ஒரு நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக டெக்னீஷியனாக பாடகராக பாடல் ஆசிரியராக திரைக்கதை ஆசிரியராக வசன கா்த்தாவாக கமல் தமிழ் சினிமாவில் புதிய பாதையை ஏற்படுத்தி காட்டியவர். கமல் போன்ற சாதனையாளர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றால் அது மிகையல்ல.
ஆனால் அரசியல்வாதியான கமல்ஹாசன், இப்போது திமுகவின் விசுவாசியாக மாறி அவர்களுக்கு ஜால்ரா அடிப்பதை பார்த்த அவர்களது ரசிகர்களே முகம் சுளிக்கின்றனர். ஆரம்பத்தில் அவரது வீராப்பான பேச்சை கேட்டு அவரது இயக்கத்தில் சேர்ந்த பலரும் திமுகவுக்கு அவர் அடிக்கும் ஜால்ரா சத்தம் காரணமாக காதைப் பொத்திக் கொண்டு தெறித்து ஓடுகின்றனர்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, கண்ணதாசன் எவ்வளவு சிறந்த கவிஞர் என்பதற்கு இது சிறந்த உதாரணம். ஒருமுறை அவரிடம், குடிகாரர்களுக்கு ஒரு பாட்டு எழுத சொல்கிறார்கள். அதாவது இனி குடிக்க மாட்டேன் என்று சத்தியம் பண்ற மாதிரி ஒரு பாட்டு. வழக்கமாக அவர் எழுதிவிட்டு பாட்டை திருத்தி எழுத மாட்டார். ஆனால் இந்த ஒரு பாடலை மட்டும் அவர் திருத்தி எழுதினார்.
முதலில் இன்று முதல் குடிக்க மாட்டேன் என்று எழுதியிருந்தார். அப்புறம் யோசிச்சுகிட்டு இல்ல குடிகாரன் அப்படி சொல்ல மாட்டான் என்று நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று திருத்தி எழுதினார். இதுதான் நல்ல அடிமையின் அடையாளம். சத்தியம் தவறுவதா இல்லை கடைபிடிப்பதா என்று நாளைக்கு முடிவு பண்ணிக்கலாம் என்று எழுதியதாக நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். திமுகவை முதலில் எதிர்த்து விட்டு பிறகு திமுகவின் தீவிர விசுவாசியாக மாறிய இவர் நல்ல அடிமை யார் என்று விளக்கியிருப்பது ரொம்பவும் பொருத்தமாக உள்ளது என்று ரசிகர்கள் பலரும் கமலை கலாய்த்து வருகின்றனர்.





