நடிகர் சிவக்குமார் தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர். அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி இருவருமே தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நட்சத்திரங்களாக இருக்கின்றனர். சினிமாவில் நடிக்க ஆர்வமின்றி நடிக்க வந்து, இப்போது முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா.
ஆனால் சினிமாவில் நடிக்க சின்ன வயதில் இருந்தே அதிக ஆர்வத்தில் இருந்தவர் நடிகர் கார்த்தி. இப்போது கார்த்தி நடிப்பில் சர்தார் 2 படம் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து கைதி 2 படத்தில் அவர் நடிக்க உள்ளார். கூலி படத்தை முடித்துவிட்டு கைதி 2 படப்பிடிப்பை துவங்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார்.
கங்குவா படத்துக்கு பின் சூர்யா நடித்த ரெட்ரோ படம் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கிடையே ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது படத்தில் வக்கீலாக நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷாவும் வக்கீலாக நடிக்கிறார். படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜியும் வக்கீல் கேரக்டரில் நடிப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் கார்த்தி கூறியதாவது, கடந்த 15, 20 வருடங்களுக்கு முன்னால், சின்ன பையனாக இருக்கிற போது எனக்கு ஸ்கூலுக்கு செல்வது ரொம்ப பிடிக்கும். அதனால் நேரத்திலேயே ரெடியாகி யூனிபார்ம் ஷூ மாட்டிக்கொண்டு, வாட்டர் பாட்டில் ஸ்கூல் பேக் எல்லாம் எடுத்துக்கொண்டு தயாராகி விடுவேன்.
ஆனால் அப்போதான் அண்ணன் சூர்யா குளிக்கவே போவார். 8.15 மணிக்கு ஸ்கூல் என்றால் அப்போதான் வீட்டை விட்டே வெளியே கிளம்புவார். ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு போகும்போது மணி 8.30 ஆகிவிடும். பிரேயர் ஆரம்பாகி விடும். லேட்டாக வந்ததால் அங்குள்ள கிரவுண்டில் மரத்தடியில் 10, 15 பேரை எங்களை எல்லாம் கைதி மாதிரி நிற்க வைத்து விடுவார்கள். ரொம்பவும் கேவலமாக இருக்கும்.
ஆனால் என்கூடவே வந்த அண்ணன் சூர்யா, முன்னாடி போய் நின்று ஒரு பேட்ஜ் எடுத்து சட்டையில் குத்திக்கொள்வார். அந்த பேட்ஜ் எதற்கு என்றால், லேட்டாக வருகிறவர்களை பிடிப்பதற்குதான். அதனால் அந்த பேட்ஜை குத்தியவுடன் அவர் அதிகாரி ஆகி விடுவார். நான் குற்றவாளி ஆகி விடுவேன். அப்புறம் லேட்டா வந்தவர்களை கிரவுண்டில் 3 ரவுண்டு ஓட விடுவார்கள். அப்படி பலமுறை நான் ஓடியிருக்கிறேன் என்று கார்த்தி கூறியிருக்கிறார்.





