விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் நடித்து, சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் கவின். அதன் பிறகு வேலைக்காரன் என்ற ஒரு சீரியலிலும் கவின் நடித்திருந்தார். அதன் மூலம் பார்வையாளர்கள் மத்தியில் பரிச்சயத்தை பெற்றார். அடுத்து வெள்ளித்திரைக்கு வர ஆசைப்பட்ட கவின், சினிமாவில் நடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.
இதற்கிடையே நடிகர் கவின் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதில் இலங்கையைச் சேர்ந்த பெண் போட்டியாளர் லாஸ்லியாவை ஒரு தலையாக காதலித்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் கவின், லாஸ்லியாவை சுற்றிச் சுற்றி வந்தார். இதனால் அதிகளவில் பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றார். அதன் பிறகு ஒரு கட்டத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட கவினுக்கு, சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.
டாடா, லிப்ட், ஸ்டார் ஆகிய படங்கள் கவினுக்கு நல்ல வெற்றி படங்களாக அமைந்து அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து இப்போது டைரக்டர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்கும் ப்ளடி பெக்கர் என்ற படத்தில் கவின் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை நெல்சன் திலீப் குமாரிடம் உதவி இயக்குனராக இருந்த அவரது நண்பர் சிவபாலன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் நடிகர் கவின் பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்திருக்கிறார். நெல்சனின் கோலமாவு கோகிலா, டாக்டர், ஜெயிலர் படங்களைப் போலவே இந்தப் படத்திலும் டார்க் காமெடி ஜார்னரில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கலந்துள்ளது. ப்ளடி பக்கர் படம் வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.
சமீபத்தில் பிரமோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் கவின் இந்த படத்துக்காக தன்னை தயார்படுத்திக் கொண்ட விதம் குறித்து அந்த நேர்காணலில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.அதுபற்றி நடிகர் கவின் கூறுகையில், உண்மையாகவே பிச்சைக்காரர்களுக்கு காசு போடுகிறார்களா, என்கிற சந்தேகம் எனக்கு வந்தது. அதனால் அந்த கெட்டப் போட்டுக்கொண்டு தெருவில் நடந்தேன். ஒரு அம்மாவிடம் சென்று, சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சு, காசு இருந்தா குடுங்க என்று கேட்டேன்.
அந்த அம்மா எனக்கு இருபது ரூபாய் கொடுத்தார். அதன்பின்தான் எனக்கு நம்பிக்கை வந்து, சரி சூட்டிங் போகலாம் என முடிவு செய்தேன் என்று நடிகர் கவின் கூறியிருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிச்சைக்காரன் கேரக்டரில் நடிக்கிறார் என்பதற்காக பிச்சை எடுத்தாரே, கொலைகாரன் கேரக்டரில் நடித்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று சிலர் கமெண்ட் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.





