தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சில படங்களில் வில்லனாக நடித்தவர் லிவிங்ஸ்டன். பிறகு சுந்தரபுருஷன், என் புருஷன் குழந்தை மாதிரி உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். இதில் ரம்பா தேவயானி போன்ற நட்சத்திர நாயகிகள் அவருக்கு ஜோடியாக நடித்தனர். சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் லிவிங்ஸ்டன் அதிகமாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் லிவிங்ஸ்டன் கூறியதாவது, சினிமாத்துறையில் எனக்கு உயிர் நண்பன், ஏன் நண்பன் என்றே கூட எனக்கு யாரும் கிடையாது. சில பிரச்னைகள் வரும்போது அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது நிரந்தர விரோதியும் கிடையாது என்பது போல எனக்கு அந்த மாதிரி யாருமே இல்லை. நான் அந்த மாதிரி யாரையும் சம்பாதித்தது கிடையாது.
நண்பர்கள் எல்லாம் ஒரு வரம்புதான். அதை மீறி எல்லாம் போக முடியாது. நாம அவங்ககிட்ட என்ன எதிர்பார்க்கிறமோ அதை அவர்கள் கொடுப்பது இல்லை. அப்போது ஒரு மனஸ்தாபம் ஏற்படும். எதுக்கு அவங்க நட்பு வேண்டாம் என்று தோன்றிவிடும். நம்ம பாட்டுக்கு நல்ல வேலையை பார்த்துட்டு போலாம் என்று தோன்றி விடும்.
சில நட்புகளால் தான் என்னுடைய சினிமா வாழ்க்கையே என வீணாகி விட்டது. நட்பு எல்லாம் சினிமாவில் இருக்கவே கூடாது. அதனால்தான் இப்ப எல்லாம் யாரையும் யாரும் நண்பனாக வைக்கறது இல்லை. அதில் வீணான பிரச்னைகள் தான் வரும். நம்முடைய நலம் விரும்பிகளாக அவர்கள் இருக்கணும்.
நான் எல்லோருடைய நலனிலும் அக்கறை கொண்டவன். நீங்க நல்லா இருக்கணும் என்று நான் ஜெபம் பண்ணுவேன். வேதாத்திரி மகரிஷியோட சிஷ்யன் நான். யாரிடமும் ஹலோ என்று சொல்ல மாட்டேன். வாழ்க வளமுடன் என்றுதான் சொல்வேன். எல்லோரும் நல்லா இருக்கணும் என்று நான் பீல் பண்ணுவேன். அப்படி நினைக்காதவர்களோடு நான் ஒதுங்கி நிற்கிறேன். அவர்களை நான் தூர வைத்து விடுகிறேன். அவ்வளவுதான். இதுதான் உண்மை.
சினிமாவில் நான் அடைந்ததை விட இழந்ததுதான் ரொம்பவும் அதிகம். எனக்கு உதவி செய்பவர்கள் முன்ன பின்ன தெரியாதவர்களாக இருப்பார்கள். ஆனால் எனக்கு உதவி செய்வார்கள். யாரை நம்பி இருந்தனோ யாருக்கு நான் உதவி செய்தனோ அவங்க எப்பவும் எனக்கு உதவியது இல்லை. அதுதான் சினிமா என்று நடிகர் லிவிங்ஸ்டன் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





