என்னதான் வசதி இருந்தாலும் செல்வ செழிப்பாக வாழ்ந்தாலும் உடல் நலம் இல்லை என்றால் அந்த வாழ்க்கையில் பூரணமாக ஒரு சந்தோஷம் இருக்காது. அதை அனுபவமாக உணர்ந்துதான் உடல் ஆரோக்கியம்தான் மிகப்பெரிய செல்வம் என்று பெரியோர்கள் சொன்னார்கள். உடல் ஆரோக்கியம்தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ பெரிதும் காரணமாகிறது.
ஆனால் என்னதான் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக விழிப்புணர்வாக இருந்தாலும் பார்த்து பார்த்து சாப்பிட்டாலும் உடற்பயிற்சிகள் செய்தாலும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு முதுமை துவங்கிய பிறகு உடலில் பலவிதமான பிரச்னைகள் வரவே செய்கிறது. இதை யாராலும் தவிர்க்க முடியாது. ஆனால் அந்த பாதிப்பை குறைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
அந்த வகையில் சினிமா நடிகர் நடிகைகளை பொருத்த வரை உடல் ஆரோக்கியம்தான் அவர்களது சொத்து. சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பது போல உடல் ஆரோக்கியமும் பொலிவான தோற்றமும்தான் அவர்களை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை பெற்றுத் தரும். கொஞ்சம் முதுமை தெரிய ஆரம்பித்து விட்டால் ஹீரோ வேஷம் கை நழுவிப் போய்விடும்.
அந்த வகையில் மலையாள நடிகர்களில் இன்றும் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுவர் நடிகர் மம்முட்டி. இன்றும் 70 வயதுகளை கடந்த நிலையில் ஹீரோவுக்குரிய ஒரு கம்பீரமான அழகான தோற்றத்தில் அவர் காணப்படுகிறார். சமீபத்தில் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மலையாள நடிகர் மம்முட்டி பங்கேற்றார்.
அப்போது நடிகர் மம்முட்டி பேசியதாவது, எனக்கு சில காலமாக வாசனை மற்றும் சுவை அறிந்து கொள்ளும் உணர்வு இல்லாமல் போய் விட்டது. எந்த வாசனையாக இருந்தாலும் அதை என்னால் உணர முடியவில்லை. சாப்பிட்டால் உணவின் சுவையும் தெரியவில்லை. கொரோனா பாதிப்பாக இருக்கலாமோ என்று நினைத்தேன். பரிசோதனைக்கு பிறகு வேறு பிரச்சனை எனத் தெரிந்தது.
நமக்கு பார்க்கும் திறன் கேட்கும் திறன் இவை இரண்டுமே கடவுள் தந்த வரம். அதேபோல் சுவைத்திறனும் தான். இப்போது மெல்ல மெல்ல நான் குணமடைந்து வருகிறேன். நம்மிடம் யாராவது சத்தத்தை குறைக்க சொன்னாலோ அல்லது மென்மையான குரலில் பேச சொன்னாலோ அதை நம்மால் கேட்க முடியும் என்பதால் தான். கேட்க முடியாதவர்கள் ஒருபோதும் அப்படி சொல்ல மாட்டார்கள். மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றைக் கேட்க விரும்புகிறார்கள். கேட்பது ஒரு தெய்வீக வரம் என்று அந்த நிகழ்ச்சியில் நடிகர் மம்முட்டி பேசியிருக்கிறார்.





