குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்போது முக்கியமான நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார் மணிகண்டன். மணிகண்டனின் திரையுலக பயணத்தில் மைல்கல்லாக அமைந்த திரைப்படம் விக்ரம் வேதா தான். அதில் சிறிய கதாபாத்திரமே அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தாலும், அதன் தாக்கம் பெரிய அளவில் இருக்கும்.
அதுமட்டுமல்ல விக்ரம் வேதாவின் வெற்றிக்கு மிக மிக முக்கியமான காரணமாக அமைந்தது அதில் இடம்பெற்ற வசனங்கள்தான். இந்த வசனங்கள் அனைத்தையும் மணிகண்டன் தான் எழுதியிருந்தார் என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தும் தகவலாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, ஜெய் பீம் திரைப்படமும் மணிகண்டனுக்கு ஒரு திருப்புமுனையை கொடுத்தது.
இதன்பிறகு, நடிகர் என்னும் அந்தஸ்திற்கு வந்துவிட்டார் மணிகண்டன். முதல் திரைப்படம் ஆன குட் நைட், இரண்டாவது திரைப்படமான லவ்வர் மற்றும் மூன்றாவது திரைப்படம் ஆன குடும்பஸ்தன் என அனைத்தும் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது. வசூலையும் வாரி குவித்தது. இதன் மூலம் ஹார்ட்ரிக் வெற்றியை கொடுத்த நாயகன் என்ற பெருமையைப் பெற்றார் மணிகண்டன்.
இதனைத் தொடர்ந்து தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக அவர், இயக்குனர் தியாகராஜா குமாரராஜா உடன் கை கோர்க்கிறார். ஆரண்ய காண்டம் மற்றும் சூப்பர் டீலக்ஸ் என இரண்டு தரமான திரைப்படங்களை கொடுத்தவர் தியாகராஜன் குமாரராஜா. இதன் பிறகு அவர் எந்த திரைப்படங்களையும் இயக்காமல் இருந்தது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
இப்படியான சூழலில் தியாகராஜன் குமாரராஜா மணிகண்டனுடன் இணைய போவதாக வெளியாகி இருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போல், கூழாங்கல் மற்றும் கொட்டுக்காளி என இரண்டு திரைப்படங்களை கொடுத்து சர்வதேச திரை உலகை தனது பக்கம் திரும்ப வைத்த பி எஸ் வினோத்ராஜ் இயக்கத்திலும் மணிகண்டன் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
இதுபோக, வெற்றிமாறன் சிம்பு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திலும் மணிகண்டன் இருக்கிறாராம். வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவரைக் கொண்டு வர வெற்றிமாறன் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. தலைவன் தலைவி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் பாண்டிராஜ் உடன் விஜய் சேதுபதி பணிபுரிய இருக்கிறார். இந்தத் திரைப்படத்திலும் மணிகண்டனுக்கு ஒரு முக்கியமான ரோல் இருப்பதாக சொல்கிறார்கள்.





