குட் நைட் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வெற்றி பெற்றவர் மணிகண்டன். ஆரம்பத்தில், தனது பல குரல் திறமையின் மூலம், விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றார் மணிகண்டன். அங்கிருந்து நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு சென்ற அவர், பல குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

வானொலியில் குரல் கொடுத்தும், சில படங்களில் டப்பிங் பணிகளையும் செய்து வந்த மணிகண்டனுக்கு பீட்சா இரண்டாம் பாகத்தில் வசனகர்த்தாவாகும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வந்த அவர், 8 தோட்டாக்கள் திரைப்படத்தில் நடித்து பலரையும் கவனிக்க வைத்தார்.
இதன் பிறகு, நலன் குமாரசாமி இயக்கத்தில் காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் முரளி கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன், ரவுடியாக ஆசைப்படும் அப்பாவி இளைஞர் கதாபாத்திரத்தில் கவர்ந்தார். மணிகண்டனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது என்றால் அது நிச்சயம் விக்ரம் வேதா திரைப்படம் தான்.

போலீஸ் துறையில் சாதிக்க விரும்பும் இளைஞராக நடித்திருந்த அவர், அந்தப் படத்திற்கு வசனத்தையும் எழுதினார். புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவான விக்ரம் வேதா திரைப்படம், மிகப்பெரிய ஹிட் ஆவதற்கு வசனங்களும் ஒரு காரணமாக அமைந்தது. இதன்பிறகு, காலா திரைப்படத்தில் லெனின் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன், ஒரு காட்சியில் ரஜினியுடன் சறுக்கி சமமாக பேசி பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
மணிகண்டனின் திரை பயணத்தில் முக்கிய பிளாட்பார்ம் ஆக அமைந்தது ஜெய் பீம் திரைப்படம். ராசா கண்ணு எனும் கதாபாத்திரத்தில் நடித்த அவர் சிறிது நேரமே வந்தாலும், தான் நடித்த ஒவ்வொரு காட்சியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இப்படி தொடர்ச்சியாக குணசித்தர கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த மணிகண்டனை, ஹீரோவாக்கியது குட் நைட் திரைப்படம்தான்.
Pooja Glimpse video of Manikandan's next movie!!
VJS done first clap for the movie🎬
pic.twitter.com/aqyJsuRiw3— AmuthaBharathi (@CinemaWithAB) August 4, 2023
குறட்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், காதல் குடும்பம் நகைச்சுவை என அத்தனை விஷயங்களும் கலந்து இருந்தால் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் மணிகண்டன் தற்போது மீண்டும் குட்நைட் பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இருக்கிறார். பிரபு ராம் வியாஸ் என்பவர் இயக்கும் இந்த திரைப்படத்தில், கதாநாயகியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். இதற்கான பூஜைகள் நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி படத்தின் ஷூட்டிங்கை கிளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்தார். குட் நைட் திரைப்படத்தைப் போல இந்த திரைப்படமும் மணிகண்டனுக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





