உலக தமிழர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த “ஜெயிலர்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. “ஜெயிலர்” திரைப்படம் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்திருந்தது. “கபாலி” திரைப்படத்திற்குப் பிறகு “ஜெயிலர்” திரைப்படத்திற்குத்தான் மிகப் பெரிய ஓப்பனிங் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

“பீஸ்ட்” திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் “ஜெயிலர்”. “பீஸ்ட்” திரைப்படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. ஆதலால் நெல்சன், நிச்சயம் “ஜெயிலர்” திரைப்படத்தில் பந்தயம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதே போல் ரஜினிகாந்த் இதற்கு முன்பு நடித்த “அண்ணாத்த” திரைப்படமும் சரியாக போகவில்லை என்பதால் “ஜெயிலர்” திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இவ்வாறு மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் “ஜெயிலர்” திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் நெல்சனும் ரஜினிகாந்தும் பந்தயம் அடித்தார்களா? இல்லையா? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

கதை
திகார் ஜெயிலில் ஜெயிலராக இருந்து ஓய்வு பெற்ற ரஜினிகாந்த், தமிழ்நாட்டின் அரக்கோணத்தில் தனது மனைவி, மகன், மருமகள், பேரன் ஆகியோருடன் வசித்து வருகிறார். ரஜினிகாந்தின் மகனான வசந்த் ரவி அசிஸ்டண்ட் கமிஸ்னராக இருக்கிறார். அவர் ஒரு சிலை கடத்தல் வழக்கை விசாரிக்கையில் திடீரென மாயமாகிவிடுகிறார். தனது மகனை தேடும் பணியில் விஸ்வரூபம் எடுக்கும் ரஜினிகாந்த் அந்த சிலை கடத்தல் கும்பலை ஒரு கை பார்க்கிறார். இதனால் ரஜினிகாந்திற்கு என்னென்ன சிக்கல் வருகிறது, அந்த சிலை கடத்தல் கும்பலை அவர் என்ன செய்கிறார் என்பதுதான் மீதி கதை.
படத்தின் பிளஸ்கள்
ரஜினிகாந்த் ஏற்று நடித்திருக்கும் டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரம் பாட்ஷாவை நியாபகப்படுத்துகிறது. பாட்ஷாவில் எப்படி ஒரு டிரான்ஸ்ஃபர்மேஷன் காட்சி இருக்கிறதோ, அதே அளவு Goosebumps-ஐ கிளப்பும் விதமாக வேற லெவல் டிரான்ஸ்ஃபர்மேஷன் காட்சியை வைத்திருக்கிறார் நெல்சன். அந்த காட்சியில் தியேட்டரை அதிர்கிறது.

72 வயதிலும் ஆக்சன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார் ரஜினிகாந்த். “வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டுப் போகலை” என்ற படையப்பா வசனத்தை உண்மையாக்கும் விதமாக ஒவ்வொரு காட்சியிலும் ரஜினிகாந்த் மாஸ் காட்டுகிறார். பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு நபரை அவரது வீட்டில் எப்படி எல்லாம் நடத்துவார்களோ அது எல்லாம் ரஜினிக்கும் நடக்கிறது. அது போன்ற காட்சிகளில் முள்ளும் மலரும் ரஜினிகாந்தை நாம் பார்க்கலாம். மேலும் ரஜினிகாந்தும் அவரது பேரனும் இடம்பெறும் காட்சிகள் ரசிக்கும்படியாக அமைந்திருக்கின்றன.
ரஜினிகாந்த் எப்படி ஒரு பவர்ஃபுல்லான ஹீரோவாக வருகிறாரோ, அதே அளவுக்கு பவர்ஃபுல்லான வில்லனாக வருகிறார் விநாயகன். தனது வில்லத்தனத்தால் ரசிகர்களை அசரவைத்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்களை தவிர்த்து ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி செராஃப், தமன்னா ஆகியோர் அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட ரோல்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்திற்கு மிகப் பெரிய பலமாக இருப்பது அனிருத்தின் பிஜிஎம். ரஜினிகாந்த் திரையில் தோன்றும் காட்சிகளில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அளவுக்கு இசையமைத்திருக்கிறார். நெல்சனை எடுத்துக்கொண்டோம் என்றால், ரஜினிகாந்திற்கே உரிய மாஸோடு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். “பீஸ்ட்” படத்தில் விட்டதை “ஜெயிலர்” படத்தில் பிடித்துவிட்டார் என்று தாராளமாக கூறலாம். மேலும் விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும் நிர்மலின் எடிட்டிங்கும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
படத்தின் மைனஸ்கள்
யோகி பாபுவின் நகைச்சுவை காட்சிகள் அவ்வளவாக எடுபடவில்லை. மேலும் இத்திரைப்படத்தின் கதை ஏற்கனவே தமிழ் சினிமாவில் அரைத்த மாவுதான் என்பதால் ஒரு கட்டத்தில் இனி என்ன நடக்கும் என்பதை பார்வையாளர்களால் ஊகிக்கமுடிகிறது. நெல்சனின் வழக்கமான டார்க் காமெடி ஓரளவு ஒர்க்கவுட் ஆகியிருந்தாலும் பெரிதாக எடுபடவில்லை. அதே போல் திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே இருப்பது பார்வையாளர்களை முகம் சுழிக்க வைக்கிறது.
எனினும் இந்த மைன்ஸ்கள் எல்லாம் ரஜினிகாந்துடைய கரிஷ்மாவின் முன்னால் காணாமல் போய்விடுகிறது என்பதுதான் உண்மை.





