சென்னையில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த வாரத்தில் சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு மொபைல் போன் செயலி மூலம் போதைப் பொருள் சப்ளை நடந்ததாக, சில மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அப்படி கைது செய்யப்பட்ட மாணவர்களை விசாரித்த போது, அதில் ஒருவரது மொபைல் போனில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துலக் என்பவரது மொபைல் நம்பரும் இருந்துள்ளது. இதையடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில், போலீசார் அவரை கைது செய்தனர். ஜேஜே நகர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தனது வக்கீலுடன் சென்று இந்த வழக்கு குறித்து விசாரித்து வந்த நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 2 மாதங்களுக்கு முன் போடப்பட்ட வழக்கு இது. அந்த பசங்க மொபைல் போனில் என் பையன் நம்பர் இருந்துள்ளது. என் பையன் சிகரட் பிடிப்பானான்னு என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் தவறு செய்திருந்தால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
என் போனில் கூட பல நடிகைகள் போன் நெம்பர்கள் உள்ளது. அதற்காக தவறாக சொல்ல முடியுமா, அவர்களை படத்தில் நடிக்க புக் செய்ய நான் பேசியிருக்கலாம். பார்ப்போம். என் பையன் என்பதற்காக நான் காப்பாற்ற சொல்லவில்லை. தமிழ்நாட்டில் பார்க், பீச், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், சந்து, பொந்து என எல்லா இடங்களிலும் போதைப்பொருள் எப்படி கிடைக்கிறது.
போதை பொருளை ஒழிக்க வேண்டும். டாஸ்மாக் மதுவையும் சேர்த்துதான் சொல்கிறேன். போதை ஒழிப்பு விழிப்புணர்வுக்காக நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த 3 கோடி ரூபாயை செலவு செய்து சரக்கு என்ற படம் எடுத்தேன். அதை தியேட்டர்களிலும் வெளியிட முடியவில்லை. ஓடிடியில் வெளியிட அனுமதிக்கவில்லை. எந்த சக்தி இதை தடுத்தது, நான் போதை ஒழிப்புக்காக எடுத்த படத்தையே வெளியே வர விடவில்லை. பிறகு எப்படி போதையை ஒழிப்பார்கள்?
துபாய் மலேசியா சிங்கப்பூர் போல இங்கேயும் ஒரே சட்டம் போட்டு போதைப் பொருளை மொத்தமாக தடுக்க முடியும். டாஸ்மாக் மது மனிதர்களை கொல்கிறது. அதை முதலில் ஒழிக்க வேண்டும். ஆனால் எளியவன் என்றால் இளிச்சவாயனாக பார்க்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு முழுவதும் போதை வஸ்து இருக்கிறது. போலீசார் பிடிக்கிறார்கள். கலெக்சன் பார்க்கிறார்கள். ஆனால் ஒரே நாளில் போதைப்பொருளை நிறுத்த முடியும். நேரம் வரும். அப்போது நான் பொங்குவேன், என ஆவேசமாக கூறியிருக்கிறார் மன்சூர் அலிகான்.





