லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்க, அதனை தேடி அலையும் கும்பல் ஒரு பக்கம், போலீசார் உடன் சேர்ந்து ரவுடிகளை புரட்டி எடுக்கும் கார்த்தி இன்னொரு பக்கம் என கைதியில் காட்சிக்கு காட்சி மிரட்டி இருந்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்த படம் வெளியான சமயத்தில் பேசி இருந்த அவர், நான் மிகப்பெரிய மன்சூர் அலிகான் ரசிகன் என்றும், கைதி திரைப்படத்தை முதலில் அவருக்காக தான் எழுதினேன் என்றும் கூறினார். செல்லும் மேடை எல்லாம் மன்சூர் அலிகானை தான் எவ்வாறு ரசித்தேன் என்பதை கட்டாயம் கூறுவார் லோகேஷ் கனகராஜ்.
இதேபோல் சமீபத்தில் பேட்டி வைத்திருந்த மன்சூர் அலிகான், கைதி திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் தான் நடிக்க இருந்தது பற்றி பகிர்ந்தார். தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தரப்பினர் கூறிய கதை எனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், ஆனால் அந்த சமயம் நான் சிறைக்கு சென்றதால் படத்தில் நடிக்க முடியாமல் போனது என்றும் கூறியிருந்தார்.

இந்த சூழலில், விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அதில் மன்சூர் அலிகானுக்கு மிக முக்கியமான ரோலை கொடுத்துள்ளார். விஜய் பிறந்தநாள் அன்று வெளியான நா ரெடி தான் பாடலில், மன்சூர் அலிகானும் இடம் பெற்றிருந்தார்.
இதைப் பார்க்கையில் லியோ படத்தில் அவர் விஜய்யின் கேங்க் ஆக இருக்கலாம் என்று ரசிகர்கள் பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டு வந்தனர். இப்படி இருக்க, லியோ படத்தில் தான் நடித்ததை அவர் பகிர்ந்து உள்ளார். அவர் பேசியதாவது, “லியோவில் டப்பிங் பணியை முடித்து விட்டேன்.
தளபதி விஜயை உயர்த்துவதற்கு அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மிக கடினமாக உழைத்தார். சினிமா மீதான விஜயின் ஆர்வமும், அவர் தந்தையின் உழைப்பும்தான் விஜய் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கு காரணமாக உள்ளது. நாளைய தீர்ப்பு திரைப்படத்திலிருந்து விஜய்யை பார்க்கிறேன் அவர் கொஞ்சம் கூட மாறவில்லை. லியோவில் புகை பிடிப்பது மற்றும் மது குடித்தல் தொடர்பான காட்சிகள் இருப்பதாக சிலர் புகார் கூறுகின்றனர். முதலில் படத்தைப் பாருங்கள். சினிமாவில் புகை பிடிக்கும், மது குடிக்கும் காட்சி வைக்க கூடாது என்றால் முதலில் அதை விற்பனை செய்வதை தடை செய்யுங்கள்” என்று காட்டமாக பேசினார்.





