விஜயின் கோட் படத்திற்கான பணிகளில் தற்போது தீவிரம் காட்டி வருகிறார் வெங்கட் பிரபு. இதுவரை விஜய் படத்தில் இல்லாத அம்சமாக, டைம் டிராவல், பழைய காலங்களின் என்ட்ரி என புது விதமாக இந்த திரைப்படம் அமையப்போகிறது. ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜயை மிகவும் இளமையான கேரக்டரில் காண்பதற்காக தொழில்நுட்பத்தின் உதவியை படக்குழு நாடி உள்ளது. இதற்காக, அமெரிக்காவில் பிரபல நிறுவனத்திடம் வி எஃப் எக்ஸ் பணிகளை படக்குழு மேற்கொண்டது. ஏ ஐ தொழில் நுட்பமும் இதில் பயன்படுத்தப்படுகிறது.
படத்தில் சிறப்பம்சமாக மறைந்த நடிகர் விஜயகாந்தை சில காட்சிகளில் காண்பிக்க குழு திட்டமிட்டுள்ளது. இதுபோக, ஒரு பாடலில் நடிகை திரிஷா நடனம் ஆடி இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வைக்க வெங்கட் பிரபு திட்டமிட்டு இருக்கிறார். தனது அடுத்த படத்தில் அவர் சிவகார்த்திகேயனோடு தான் பணியாற்றி இருக்கிறார்.
டைம் டிராவல் கான்செப்ட் என்பதால் அதனுடன் தொடர்புபடுத்தி இந்த காட்சியை எடுத்திருக்கலாம் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் படத்தில் ஒரு காட்சியில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதுபோக ஏராளமான சுவாரசியமான விஷயங்களை வெங்கட் பிரபு சஸ்பென்சாக வைத்திருக்கிறாராம்.
முக்கியமாக படத்தில் இரண்டு விஜய் என பலரும் நினைத்து வரும் சூழலில், விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பதாக ஒரு செய்தியும் உலா வருகிறது. இந்த திரைப்படத்தில் மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா என கவனிக்கத்தக்க நட்சத்திரங்களும் இடம் பெற்று இருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் கோட் படம் குறித்து பல்வேறு சுவாரசியமான தகவல்களை மைக் மோகன் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது, கோட் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு இப்போதுதான் இலங்கையில் இருந்து திரும்பி இருக்கிறேன். இந்த திரைப்படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. விஜய் ரசிகர்களுக்கு இது விருந்தாக அமையும். வெங்கட் பிரபுவை இதற்கு முன்பாகவே எனக்கு தெரியும். அப்போதே நிறைய படங்களில் என்னை நடிக்க அவர் அழைத்திருக்கிறார். ஆனால் நான் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் கோட் திரைப்படத்தின் கதை மிகவும் சுவாரசியமாக இருந்ததால் அதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்த படத்தில் நான் தாடியுடன் தான் நடித்திருக்கிறேன். விஜய் மிகவும் எளிமையான மனிதர் என்று பேசியுள்ளார்.





