தமிழ் சினிமா மட்டுமல்ல பிற மாநில மொழிப்படங்களிலும் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பிஸியாக ஓடிக் கொண்டிருக்கிறார் தனுஷ். ராயன் திரைப்படத்தை முடித்த கையோடு நிலவுக்கு என் மேல் என்னடி வானம் திரைப்படத்தை இயக்கிய தனுஷ் அடுத்ததாக இட்லி கடை திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்.
இந்தத் திரைப்படம் முதலில் ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்தது. ஆனால் படத்தின் பணிகள் முடிக்க நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டி இருந்ததால் அதன் ரிலீஸ் தேதி அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவே ஒரு இந்தி திரைப்படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். ஆனந்த் எல் ராய் இதனை இயக்கியிருக்கிறார்.
படத்தில் தனுஷிற்கு விமானப்படை அதிகாரி கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க அவரது நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குபேரா திரைப்படம் வெளியானது. சேகர் கமுலா இதனை இயக்கி இருந்தார். வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து தனுஷிற்கு நேரடி இரண்டாவது தெலுங்கு திரைப்படமாக இது அமைந்தது.
குபேரா பான் இந்தியா திரைப்படம் எனக் கூறப்பட்டிருந்தாலும், அது முழுக்க முழுக்க தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறே எடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக தமிழ் சினிமாவில் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் தெலுங்கில் சக்கை போடு போட்டது. கிட்டத்தட்ட அங்கு இந்த திரைப்படம் எண்பது கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக சொல்கிறார்கள்.
அதேசமயம் பிற மொழிகளில் குபேரா எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதன் நடுவே தனது அடுத்த அடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்த சென்று விட்டார் தனுஷ். தற்போது அவர் போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜாவுடன் இணைந்திருக்கிறார். வேல்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. அண்மையில் இந்த திரைப்படத்திற்கான பட பூஜைகள் நடைபெற்றன.
இப்படி இருக்க குபேரா திரைப்படத்தின் வெற்றியால் தனது சம்பளத்தை தனுஷ் கணிசமாக கூட்டி இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு 30 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த அவர் தற்போது 50 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு பிற மாநில தயாரிப்பாளர்கள் சம்மதித்தாலும் தமிழில் இருக்கும் தயாரிப்பாளர்கள் சற்று தயக்கம் காட்டுகிறார்கள். இதனால் தனுஷிற்கு வந்த வாய்ப்புகள் அப்படியே திரும்பி செல்வதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.





