மலையாள சினிமாவில் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுபவர் நடிகர் மோகன்லால். ஆகச்சிறந்த திரைக்கலைஞனாக நடிப்பில் பெயர் பெற்றவர். சமீபத்தில் அவர் டாக்ஸி டிரைவராக நடித்த தொடரும் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை ஷோபனா, மோகன்லாலுக்கு மனைவியாக நடித்திருந்தார்.
நடிகர் மோகன்லாலுக்கு மலையாள சினிமாவை போலவே தமிழ் சினிமாவிலும் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. ஏற்கனவே நடிகர் கமல்ஹாசனுடன் உன்னைப் போல் ஒருவன் என்ற படத்தில் போலீஸ் கமிஷனர் கேரக்டரில் மோகன்லால் நடித்திருந்தார். அதன்பிறகு ஜில்லா படத்தில் நடிகர் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார்.
இப்போது குட்நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசகேர் இயக்கும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இது அப்பா மகன் சென்டிமென்ட் கதைக்களத்தில் உருவாகும் படமாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்க மோகன்லாலிடம் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
ஆனால் மலையாள படங்கள் சிலவற்றில் ஏற்கனவே அவர் கமிட் ஆகிவிட்ட நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகுதான் நடிகர் சிவகார்த்திகேயனுடன் அப்பா கேரக்டரில் நடிக்க கால்ஷீட் ஒதுக்க முடியும் என்று திட்டவட்டமாக மோகன்லால் கூறிவிட்டார். அதனால்தான் அந்த படத்தை தற்காலிமாக தள்ளி வைத்துவிட்டு மற்ற படங்களில் சிவகார்த்திகேயன் இப்போது நடித்து வருகிறார்.
நடிகர் சூர்யா இப்போது கருப்பு படத்தை முடித்த நிலையில் அடுத்ததாக தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை முடித்துவிட்டு அதன்பிறகு மலையாளத்தில் ஆவேசம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை தந்த இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.
வெங்கி அட்லூரி படத்தை முடித்த பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் காமெடி ஆக்சன் திரில்லர் படமாக இது உருவாகிறது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க மலையாள நடிகர் மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவர் ஓகே சொல்லிவிட்டால் 2வது முறையாக சூர்யா, மோகன்லால் இருவரும் இந்த படத்தில் மீண்டும் இணைவார்கள். ஏற்கனவே கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் என்ற படத்தில் மோகன்லால் பிரதமராகவும் சூர்யா அவரது பாதுகாப்பு அதிகாரியாகவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





