தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பல படங்களுக்கு டப்பிங் பேசியவர் எம்எஸ் பாஸ்கர். பிறகு சன் டிவியில் ராடன் பிக்சர்ஸ் தயாரித்த சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற காமெடி தொடரில் பட்டாபி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். நளினி நிரோஷா, பிறகு ஸ்ரீப்ரியா நிரோஷா என நடித்த இந்த காமெடி தொடர் பெரிய அளவில் பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றது.
அதன்பிறகு சின்னத்திரை நடிகராக இருந்த எம்எஸ் பாஸ்கர், எங்கள் அண்ணா என்ற படத்தில் குடிகாரன் கேரக்டரில் ஒரு காமெடி காட்சியில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். பிறகு சிவகாசி மொழி சிவாஜி தம்பிக்கோட்டை தசாவதாரம் ஏ ஒன் சபாபதி அறை எண் 305ல் கடவுள் என பல படங்களில் நடித்தார்.
ஆரம்பத்தில் காமெடி நடிகராக நடித்த எம்எஸ் பாஸ்கர் பிறகு குணச்சித்திர நடிகராகவும் மாறினார். குறிப்பாக பார்க்கிங் என்ற படத்தில் எம்எஸ் பாஸ்கர் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் அவர் டூரிஸ்ட் ஃபேமிலி படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். எந்த கேரக்டர் என்றாலும் அதில் அழுத்தமான நடிப்பை எம்எஸ் பாஸ்கர் வெளிப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் எம்எஸ் பாஸ்கர் கூறியதாவது, என்னை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு விஜய் டிவியில் இருந்து அழைப்பு வந்தது. நான் வரமாட்டேன் என்று சொல்லி விட்டேன். நான் வீட்டிலேயே 100 நாட்கள் தொடர்ந்து இருக்க மாட்டேன். பிக்பாஸ் வீட்டுக்குள் 100 நாட்கள் இருக்க சொன்னால் எப்படி முடியும்?
அதனால் கண்டிப்பாக வர முடியாது என்று கூறிவிட்டேன். என் வீட்டில் ஒரு நாள் கூட என்னால் ஒரு இடத்தில் இருக்க முடியாது. கோவித் காலகட்டத்தில் கூட வீட்டின் கேட் பகுதி, முன்னால் இருக்கும் தெரு, பக்கத்து தெரு வரைக்கும் நடந்து போய்விட்டுதான் நான் வருவேன். அப்படி இருக்கும்போது பிக்பாஸ் வீட்டுக்குள் என்னால் இருக்க முடியாது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போய்விட்டு வந்தால் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வரும் என்கின்றனர். அதை நான் முடிவு செய்ய வேண்டும். அது நல்ல மாற்றமா, இல்லையா என்று. என் மனைவி பிள்ளைகளை பார்க்காமல் என்னால் 100 நாட்கள் இருக்க முடியாது. அதுவுமின்றி எனக்கு நிறைய படங்களில் பிஸியாக இருந்தேன். அதுவும் ஒரு காரணம் என்று நடிகர் எம்எஸ் பாஸ்கர் கூறியிருக்கிறார்.





