கேரளாவை சேர்ந்த மலையாள நடிகை லட்சுமிமேனன். தமிழில் கும்கி சுந்தரபாண்டியன் பாண்டியநாடு கொம்பன் உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர். கடந்த 24ம் தேதி இரவு கொச்சி பானர்ஜி சாலையில் உள்ள மதுபான பாருக்கு தனது தோழி உட்பட 3 பேருடன் நடிகை லட்சுமி மேனன் சென்றிருக்கிறார்.
அப்போது அங்கு ஐடி ஊழியர் அலிகான் ஷா சலீம் என்பவருக்கும் நடிகை லட்சுமிமேனன் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மதுபான பாரை விட்டு அவர்கள் வெளியே வந்தும் தகராறு நீடித்துள்ளது. அப்போது ஐடி ஊழியர் அலிகான் ஷா சலீம் அங்கிருந்து தனது காரில் ஆலுவா நோக்கி சென்றுள்ளார். அப்போது நடிகை லட்சுமி மேனன் உள்ளிட்ட 4 பேரும் மற்றொரு காரில் அவரது காரை பின்தொடர்ந்து சென்று வழிமறித்து தாக்கியுள்ளனர்.
ஐடி ஊழியரை அவரது காரில் இருந்து இறக்கி, தங்களது காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடுமையாக அவரை தாக்கியுள்ளனர். அதன் பிறகு ஒரு இடத்தில் ஐடி ஊழியரை இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து எர்ணாகுளம் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஐடி ஊழியர் அலிகான் ஷா சலீம் புகார் அளித்தார்.
எர்ணாகுளம் வடக்கு போலீசார் நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாரில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நடிகை லட்சுமிமேனனின் நண்பர்கள் ஐடி ஊழியரை தாக்கியது உறுதியானது. இதையடுத்து லட்சுமி மேனனின் நண்பர்கள் அனீஸ் மிதுன் மற்றும் தோழி சோனாமோல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்
இதையடுத்து நடிகை லட்சுமி மேனன் தனது மொபைல் போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. தலைமறைவான லட்சுமிமேனன் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே நடிகை லட்சுமிமேனன், கேரளா ஹை கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில், தன் மீது புகார் கொடுத்த நபர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார்.
அந்த மனுவில் நடிகை லட்சுமி மேனன் கூறியிருப்பதாவது, ஐடி ஊழியர் என்னை பாரில் ஆபாச வார்த்தைகளால் திட்டினார். பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். நான் பாரை விட்டு வெளியே வந்த பிறகும் அந்த நபர் காரில் பின் தொடர்ந்து வந்து பீர் பாட்டிலால் என்னை தாக்கினார். ஐடி ஊழியர் காரில் கடத்தித் தாக்கப்பட்டதாக கொடுத்த புகார் ஜோடிக்கப்பட்டது. எனக்கும் அந்த குற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று அதில் கூறியிருக்கிறார். இந்த மனுவை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம் நடிகை லட்சுமி மேனனை வருகிற செப்டம்பர் 7ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.





