கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் இயக்குனராக வந்தவர் பிரதீப் ரங்கநாதன். நடிகர் ஜெயம் ரவி காஜல் அகர்வால் யோகிபாபு கேஎஸ் ரவிக்குமார் பொன்னம்பலம் உள்ளிட்டோர் நடித்த அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அந்த படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்தார். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்று ரூ. 100 கோடி வசூலை அள்ளியது.
அடுத்து ஓ மை கடவுளே இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படமும் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து 3 ஹிட் படங்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் என்ற படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் டியூட் படம் பிரமோசன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் கலந்துக்கொண்டு வருகின்றனர். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல் எல்ஐகே என்ற படத்திலும் பிரதீப் ரங்கநாதன் நடித்து முடித்திருக்கிறார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது, நான் முதல்முறையாக இயக்கிய படம் கோமாளி. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கோமாளி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அந்த படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ஒரு கார் பரிசாக கொடுத்தார். ஆனால் நான் அதை வேண்டாம் என்று அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டேன்.
ஏனென்றால் அப்போது என்னிடம் காருக்கு பெட்ரோல் போடக்கூட பணம் இல்லை. எனவே காருக்கு பதிலாக அதற்கு சமமான தொகையை ரொக்கமாக கொடுக்கும்படி அவர்களிடம் கேட்டேன். அடுத்த 3 ஆண்டுகளுக்கு எனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் அந்த பணத்தை பயன்படுத்திக் கொண்டேன். அதுதான் எனக்கு அப்போது தேவையாக இருந்தது. சினிமாவில் எனது ஆர்வத்தை தொடரவே விரும்புகிறேன்.
பணம் வேண்டுமென்றால் உடனடியாக அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி இருக்க முடியும். ஆனால் கிரியேட்டிவ் ஆக இருக்கும்போது கிடைக்கும் மன நிறைவே எனக்கு முதன்மையானது என்று நடிகர் பிரதீப் ரங்கநாதன் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறி இருக்கிறார். காரை வைத்துக்கொண்டு பணத்துக்கு சிரமப்படுவதை விட பணம்தான் இப்போதைய தேவை என நடைமுறை யதார்த்தத்தை உணர்ந்து செயல்பட்ட பிரதீப் ரங்கநாதனின் சமயோசித புத்தியை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.





