நடிகர் விஜய், சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்துவரும் நிலையில், இப்போது அரசியலில் குதித்து இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கியுள்ள அவர், தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை முதன் முதலாக வெளியிட்ட அன்றே, 2026ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தல்தான் எனது குறிக்கோள். அதில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்து முதல்வராகி விடுவதுதான் தனது நோக்கம் என்பதையும் தெளிவாக கூறிவிட்டார்.
இதன்மூலம் ஆளுங்கட்சியான திமுகவுக்கு எதிராக விஜய், தமிழக அரசியல் களத்தில் குதிப்பது உறுதியாகி விட்டது. ஆனால் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின், அவருக்கு பிறகு இன்பநிதி என திமுகவினர் போட்ட கணக்குக்கு எதிராக, விஜய் வந்திருப்பது திமுகவினரை கடுப்பாக்கி விட்டது.
கதை வசனம் எழுதிய கருணாநிதி, தமிழகத்தின் முதல்வரானார். அவரது மகன் ஸ்டாலின் முதல்வரானார். அடுத்து நயன்தாரா, ஹன்சிகாவுக்கு ஜோடியாக நடித்த உதயநிதி, விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார். அப்படி என்றால் சினிமாவில் இருந்து வந்த விஜய், தமிழக முதலமைச்சர் ஆவதில் எந்த தவறும் இல்லை என்றும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் போட்டியாளராக விஜய் வந்திருப்பதை திமுகவினர் விமர்சிக்கின்றனர்.
சமீபத்தில் கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகர் விஜய், நீட் குறித்து பல விஷயங்களை பேசினார். அப்போது தமிழக அரசு நீட் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்ததை மனப்பூர்வமாக வரவேற்பதாக கூறியிருந்தார். இதையடுத்து, துவக்கத்தில் விஜய் திமுகவை எதிர்த்து பேசினார். இப்போது சரண்டர் ஆகி விட்டார் என்ற விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் கடைசி தோட்டா படத்தின் விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, அரசியலுக்கு வந்துவிட்டால் இப்படித்தான் மாற்றி மாற்றி பேசுவார்கள். அதை எல்லாம் தாண்டித்தான் விஜய் வர வேண்டும் என்று கூறியிருக்கிறார். முதலில் திமுக, பிறகு அதிமுக, ஒரு கட்டத்தில் பாஜக என அரசியல் ஆர்வம் காட்டிய ராதாரவி, இப்போது அரசியல் விமர்சகராக மட்டுமே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





