சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி நேற்று முன்தினம் ராஜஸ்தானில் நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ரஜினிகாந்த் விஜய் சிவக்குமார் உள்பட நடிகர்கள் நடிகைகள் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என திரையுலகம் சார்ந்த ஏராளமானோர் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அப்போது நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நான் இதுவரை ஆர்பி சௌத்த்ரி தயாரிப்பில் படம் எதுவும் பண்ணியது இல்லை. ஆனால் எனக்கு அவர் நல்ல நண்பராக இருந்தார். 4 மாதங்களுக்கு முன்பு ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நான் இருந்தேன். அப்போது படப்பிடிப்பு தளத்துக்கு வந்த ஆர்பி சௌத்ரி என்னை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் என்னிடம், நான் இதுவரை 99 படங்கள் தயாரித்து விட்டேன். என்னுடைய 100வது படத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும். 100 படங்களை தயாரித்து விட்டு நான் ஓய்வெடுக்க போகிறேன் என்று சொன்னார். நான் அப்போது கண்டிப்பாக உங்கள் 100வது தயாரிப்பில் நடிக்கிறேன் என்று அவரிடம் உறுதியாக சொன்னேன். என்னிடம் இதற்காக பல கதைகள் நான் கேட்கிறேன். கேட்டுவிட்டு சொல்கிறேன் என்றும் சொன்னார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பல இயக்குனர்களை உருவாக்கிய தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி 100வது படம் தயாரிக்க இருப்பதால் அவருக்கு விரைவில் ஒரு பெரிய பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று என்னிடம் சொன்னார். ஆனால் அது நடக்க முடியாமல் போய்விட்டது.
தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி நேர்மையானவர். நாணயமானவர். பண்பான மனிதர். இதுவரை 99 படங்கள் தயாரித்தும் கூட அவரது படங்களில் எந்த பிரச்சனைகளும் பெரிய அளவில் வந்தது இல்லை. அந்த கால தயாரிப்பாளர்கள் சாண்டோ சின்னப்ப தேவர் போல எளிமையானவர். வலிமையானவர். தெய்வ பக்தி மிக்கவர். எப்போதும் பிரஷாக இருப்பார். இது அப்படி என்று ஒருமுறை அவரிடம் கேட்டேன். நான் எப்போதும் ரிஸ்க் எடுக்க மாட்டேன். எனது எல்லைக்குள் தான் படம் பண்ணுவேன். அதன் பிறகு ஆண்டவன் விருப்பம் என்பார்.
ஆர்பி சௌத்ரி 99 படங்கள் எடுத்திருந்தாலும் எந்த சர்ச்சைகளிலும் சிக்காதவர். ஏதாவது படங்களில் பிரச்னை வந்தது என்றால் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று விடுவார். அவர்கள் வீட்டில் அமர்ந்து பேசி அந்த பிரச்சனையை அங்கேயே முடித்துவிட்டு வந்துவிடுவார். அங்கிருந்து கிளம்பும்போது ஒரு காஃபி குடுங்க என்று வாங்கி சாப்பிட்டு விட்டு ஒரு எளிமையான மனிதராக எதார்த்தமான மனிதராக வாழ்ந்தவர். பிராக்டிக்கலாக இருந்தவர் என்று நடிகர் ரஜினிகாந்த் ஆர்பி சௌத்ரி குறித்து பேசியிருக்கிறார்.





