தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்த முன்னணி நடிகராக வந்துவிட்டாலே, நாளை தமிழகமே, தமிழகத்தில் எதிர்கால நட்சத்திரமே, எங்களது விடிவெள்ளியே விரைவில் அரசியலுக்கு வா என்று ஒரு தரப்பு ரசிகர்கள், நடிகர்களுக்கு அறைகூவல் விடுக்க துவங்கி விடுகின்றனர்.
அந்த வகையில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்துக்கு பிறகு, தமிழ்நாட்டு அரசியலில் ரஜினிகாந்த் குதித்து விடுவார் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் வெகுவாக நம்பினர். தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருவது எப்போது என்று ஊடகங்களிலும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். ரஜினிதான் அடுத்த முதல்வர் என்றும் தலையங்கம் எழுதி அன்றைய பத்திரிகைகள் நிறைய உண்டு.
ஆனால், ஆண்டவன் சொன்னால் நான் வந்து விடுவேன், நேற்று கண்டக்டர், இன்னிக்கு சூப்பர் ஸ்டார், நாளைக்கு யாருன்னு அந்த ஆண்டவன் முடிவு பண்ணுவான், நான் எதுல வருவேன், எப்டீ வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் என்று சில படங்களில் டயலாக் பேசி ரசிகர்களை நன்றாக சூடு கிளப்பி விட்டார் ரஜினிகாந்த்.
ஆனால் கடைசி வரை ரஜினிகாந்த், அரசியல்வாதி ஆகவே இல்லை. இதோ அதோ என்ற சொல்லியே தன் படங்களை 25 ஆண்டுகளுக்கு மேல் ரசிகர்களின் தயவால் ஓட்டி விட்டார். இப்போதும் அவர் ஓய்வு இல்லாமல் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால் அவரது ஜூனியர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து தீவிர அரசியலில் இறங்கியும் விட்டார்.
இரு தினங்களுக்கு முன், அமைச்சர் எவ வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் என்னும் நூல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்த நூலை வெளியிட ரஜினி பெற்றுக்கொண்டு விழாவிலும் சிறப்புரையாற்றினார். திமுகவை பாராட்டி பேசினார். ஆளுமை நிறைந்த முதல்வர் ஸ்டாலின் என்றும் புகழ்ந்தார்.
அந்த விழாவில் பேசிய அமைச்சர் எவ வேலு, ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் முதலில் ஒருநாள் முதல்வர் கேரக்டரில் நடிக்க முதலில் ஷங்கர் அணுகியது ரஜினியை தான். ஆனால் முதல்வன் படத்தில் முதல்வர் கேரக்டரில் நடிக்க அவர் மறுத்துவிட்டார். அதற்கு காரணம், அப்போது கருணாநிதி முதல்வராக இருந்தார். பெரியவர் ஆட்சி காலத்தில் முதல்வர் கேரக்டரில் நான் நடிக்க மாட்டேன் என ரஜினி உறுதியாக மறுத்துவிட்டார் என்று கூறினார். முதல்வர் கேரக்டரில் சினிமாவில் நடிக்கவே பயந்த ரஜினிகாந்தை போய், நிஜத்தில் தமிழக முதல்வராக வரவேண்டும் என்று இத்தனை நாள் போராடி இருக்கிறோமா என்று அவரது ரசிகர்கள் நொந்து போயுள்ளனர்.





