நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் வருகிற 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 1999ம் ஆண்டில் வெளிவந்த நடிகர் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தில் தான் நடிகர் சிவாஜி கணேசன் கடைசியாக நடித்திருந்தார். இந்த படம் 1999ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
படையப்பா படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, படையப்பா படம் உருவான காலகட்டத்தில் இதில் வரும் நீலாம்பரி கேரக்டர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கேரக்டரை கொண்டு உருவாகி இருப்பதாக சிலர் வதந்தியை கிளப்பி விட்டுவிட்டார்கள்.
அதனால் படையப்பா படம் வந்தபிறகு அந்த படத்தை ஜெயலலிதா பார்க்க விரும்புவதாக தகவல் வந்தது. ஆனால் சிலர் அவருக்கு படத்தை போட்டுக் காட்ட வேண்டாம் என்று மறுத்தார்கள். ஆனால் நான் இது ஒரு படம் தானே? இதில் என்ன இருக்கு என்று அவருக்கு போயஸ் கார்டனுக்கு அந்த படத்தின் ரீல்ஸ்களை அனுப்பி வைத்தேன்.
ஆனால் அந்த படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இருக்கிறது என்று ஜெயலலிதா சொன்னதாக பிறகு எனக்கு சிலர் சொன்னார்கள். அன்றைய முதல்வர் கருணாநிதியும் இந்த படத்தை பார்த்து விட்டு பாராட்டினார். ஆம்எம் வீரப்பன் சிவாஜி கணேசன் ராஜ்குமார் சிரஞ்சீவி ஏவிஎம் சரவணன் என பலரும் இந்த படத்தை பார்த்துவிட்டு போனில் அழைத்து என்னை பாராட்டினார்கள்.
வழக்கமாக நான் நடிக்கும் படங்களில் இடம்பெறும் பஞ்ச் டயலாக்குகள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும். பாட்ஷா படத்தில் வந்த நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி படையப்பா படத்திலும் சில காட்சிகளில் நான் பஞ்ச் டயலாக்குகளை பேச இருந்தேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அப்படி பேசும்போது அந்த பஞ்ச் டயலாக்குகள் எப்படியோ வெளியே போய் விடும் என்பதால் நாங்கள் சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு விஷயத்தை மெயின்டைன் பண்ணினோம்.
அதாவது கேமரா முன்பு நடிக்கும் போது வசனத்தை உச்சரிக்காமல் வாயை மட்டுமே அசைத்து அந்த காட்சிகளில் நடித்து படமாக்கினோம். அதனால் படப்பிடிப்பில் என்னுடன் நடித்தவர்களுக்கு கூட நான் என்ன டயாலாக் பேசுகிறேன் என்பது தெரியாது.படம் வந்த பிறகுதான் நான் பேசிய, என் வழி தனி வழி, கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது; அப்படி கஷ்டப்படாமல் கிடைக்கிறது எதுவும் நிலைக்காது, ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் போடா போன்ற பஞ்ச் டயலாக்குகள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.





