நடிகர் ரஜினிகாந்த் இந்திய அளவில் கவனம் பெற்ற ஒரு புகழ்மிக்க நடிகராக இருக்கிறார். சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இப்போது 74 வயதிலும் அவர் ஹீரோவாக தமிழ் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். வேட்டையன் கூலி படங்களை தொடர்ந்து இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே இன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் அவரது சாதனைகளை பாராட்டி விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் மற்றும் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த விழாவில் கலந்துக்கொள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு நேரில் சென்று தமிழக அரசு சார்பில் அழைப்பிதழ் வைத்து அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழக அரசின் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ரஜினிக்கு அழைப்பிதழ் வழங்கினர்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. அந்த புகைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு கைவைத்த பனியன் அணிந்த நிலையில் காணப்படுகிறார். இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது, ரஜினிகாந்த் மிக எளிமையானவராக இருக்கலாம். பெரிய நடிகராக இருந்தாலும் ஆடையில் அதிக கவனம் இருக்க வேண்டும்.
தமிழக அமைச்சர்களில் ஒருவர் சாமிநாதன் தனது வீட்டுக்கு நேரில் வந்து அரசு விழா நடத்தும் ஒரு அழைப்பிதழை தந்து அழைப்பு விடுக்கிறார். அப்போது ஒரு சாதாரண பனியனை அணிந்துக்கொண்டு அவர் புகைப்படத்துக்கு போஸ் தருகிறார். இதுவே பிரதமர் போன்றவர்களும் வந்தால் அவர் இப்படிதான் உடையில் அலட்சியம் காட்டுவாரா?
ரஜினியின் எளிமை பாராட்டுக்குரியதாக இருக்கலாம். அதே நேரத்தில் ஒரு அமைச்சர் தன்னை நேரில் சந்திக்க வரும்போது அவருக்கு நல்ல விதமான தோற்றத்தில் ஆடை அணிந்து வரவேற்று உபசரிப்பதுதானே மரியாதையாக இருக்கும். ரஜினி போன்ற உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது முக்கியம் என்று அந்தணன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.





