நடிகர் ரஜினிகாந்த் இப்போது தமிழ் சினிமாவில் தனது 50 ஆண்டு கால நிறைவு பொன்விழா ஆண்டை கொண்டாடி வருகிறார். ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பிறகு ஹீரோவாக மாறியவர் ரஜினிகாந்த். அவர் நடித்த படங்களில் பெரிய திருப்புமுனையை அவருக்கு தந்தது முரட்டுக்காளை படம்தான். அதன்பிறகு தான் மசாலா கலந்த கமர்ஷியல் படங்களில் அதிகமாக ரஜினிகாந்த் நடித்து முன்னணி நட்சத்திரமாக மாறினார்.
நடிகர் ரஜினிகாந்த் சினிமா பயணம் குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, நடிகர் ரஜினியை பொருத்த வரை ஹீரோ வில்லன் என்ற வித்யாசம் எல்லாம் அவர் நடிக்க வந்த ஆரம்பத்திலேயே பார்க்கவில்லை. ஹீரோ வில்லன் எதுவாக இருந்தாலும் நாம் நடிக்க வந்திருக்கிறோம் என்ற எண்ணமே அவரிடம் இருந்தது. அதனால் பல படங்களில் அவர் வில்லனாக நடித்தார்.
குறிப்பாக அந்த காலகட்டத்தில் ரஜினி கமல் இருவரும் இணைந்து நடித்த படங்களில் கமல் ஹீரோ ரஜினி வில்லன் என்பது அவர்களது தோற்றங்களே வெளிப்படுத்தியது. ஏனெனில் ரஜினி ஆரம்பத்தில் வில்லனுக்குரிய ஒரு தோற்றத்தில் இருந்தார். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு ரஜினி ஹீரோவாக நடித்த போது மக்கள் அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டனர்.
ஆனால் ரஜினிக்கு சினிமாவில் இதுவரை நிறைவேறாத ஆசை ஒன்று இருக்கிறது. அதாவது ரஜினிக்கு கமல் போல ஒரு சிறந்த நடிகர் என்ற பெயர் பெற வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. பரீட்சார்த்தமான கேரக்டர்களில் நடித்து தனது முழு நடிப்பாற்றலை வெளிப்படுத்தி நடிப்பிலும் நானும் ஒரு கிங் என்று நிரூபிக்க அவருக்கு பெரிய ஆசை இருந்திருக்கிறது. ஆனால் முரட்டுக்காளை படம் அவரை வேறு பாதைக்கு திருப்பி விட்டது.
இந்த சூழலில் முரட்டுக்காளை படம்தான் அவரை மசாலா ஹீரோவாக மாற்றிவிட்டது. அதனால் வேறு வழியின்றி ரஜினிகாந்த் தொடர்ந்து மசாலா படங்களில் நடித்து வெற்றி பெற்றார். சினிமாவில் வளமான வாழ்க்கைக்காக தனது ஆசையை நிராகரித்துவிட்டு விருப்பம் இல்லை என்றாலும் பெரிய வெற்றி பெறுகிறது என்பதால் அவர் தொடர்ந்து மசாலா படங்களில் நடித்து பிரபலமானார்.
ஆனால் அப்படி ஒரு முடிவுக்கு ரஜினி வந்ததால்தான் அவரால் இன்று இந்த உயரத்தை தொட முடிந்திருக்கிறது. வில்லனாக நடிக்க மாட்டேன், மசாலா படங்களில் நடிக்க விருப்பமில்லை என்று சினிமாவில் இருந்து அவர் விலகி இருந்தால் இன்று அவர் அடைந்திருக்கும் வெற்றியும் புகழும் கிடைத்திருக்காது என்பதே உண்மை. அதனால் அதை புரிந்துக்கொண்டு ரஜினி சினிமாவில் ஜெயித்திருக்கிறார் என்று ஜெ பிஸ்மி அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.





