தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் நடிகர் ரஞ்சித். பல படங்களில் நடித்திருக்கிறார். இயக்குனர் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். பாரதி கண்ணம்மா பாண்டவர் பூமி சபாஷ் பசுபதி ராசக்காபாளையம் உள்ளிட்ட பல படங்களில் ரஞ்சித் நடித்திருக்கிறார். கடந்தாண்டில் விஜய் டிவியில் பிக்பாஸ் போட்டியாளராகவும் நடிகர் ரஞ்சித் கலந்துக்கொண்டார். அரசியல் களத்தில் அவர் பல ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
கோவையில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற நடிகர் ரஞ்சித் பேசியதாவது, தம்பி நடிகர் விஜய் மதுரையில் ஒரு மாநாடு நடத்தி இருக்கிறார். அந்த மாநாட்டில் ஒரு விஷயத்தை அவர் பதிவு செய்கிறார். நான் கேரியரில் உச்சத்தில் இருக்கும் போது அரசியலுக்கு வந்தவன். பிழைப்பு தேடி அரசியலுக்கு வந்தவன் அல்ல என்று கூறுகிறார்.
அவர் அப்படி உச்சத்தில் இருக்கும் போது அரசியலுக்கு வந்தவன். பிழைப்பு தேடி வரவில்லை என்று சொல்கிறார். அவர் யாரை அப்படி சொல்கிறார்? நடிகர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரை சொல்கிறாரா? இல்லே புரட்சித் தலைவி அம்மாவை சொல்றாரா? எனது அண்ணன் பாசத்துக்குரிய நடிகர் விஜயகாந்தை சொல்கிறாரா?
அல்லது நேரடியாக சொல்ல வெட்கப்பட்டு அய்யா கமல்ஹாசனை சொல்லியிருப்பாருன்னு நான் நினைக்கிறேன். ஏனென்றால் அந்த வார்த்தைக்கு பொருத்தமானவர் அவர்தான். பிழைப்பை தேடி அரசியலுக்கு வந்தவர் அவர்தான். இன்று யாருக்காக வாக்கு போடறீங்க? கவர்ச்சிக்காக வாக்கு போடறோம். நல்லவர்கள் யாரும் அந்த இருக்கையில் அமரவில்லை என்றால், திருடர்கள் எல்லாம் அந்த சேரில் அமர ஆசைப்படுவார்கள். நல்லோர்கள் நம்மை ஆள வேண்டும். அப்போதுதான் நாம் நன்றாக வாழ முடியும்.
எனக்கு வர்ற கோபத்துக்கு ஓங்கி ஒரு குத்து குத்தணும் என்று தோணுது. அதை முதலில் வாக்குகளில் குத்துங்க என்று சொல்றேன். வாக்கால் குத்தி ஒழிக்க வேண்டும். இது எனது அன்பு வேண்டுகோள். மாறணும், மாற்றப்பட வேண்டும். நல்லவர்கள் ஆள வேண்டும் என்றால் அவர்கள் ஆட்சி செய்தால்தான் நாம் நிம்மதியாக வாழ முடியும் என்று அந்த விழாவில் நடிகர் ரஞ்சித் பேசியிருக்கிறார்.
சமீபகாலமாக நடிகர் ரஞ்சித் இப்போது பாஜக ஆதரவாளராக இருந்து வருகிறார். அதனால் தனது கொள்கை எதிரி பாஜக என்று கூறும் நடிகர் விஜய்க்கு எதிராக பேசியது மட்டுமின்றி திமுக ஆதரவாளராக இருக்கும் நடிகர் கமல்ஹாசன் குறித்தும் விமர்சித்து உள்ளார். சினிமாவில் கேரியர் இழந்த பிறகு அரசியலுக்கு பிழைப்பு தேடி வந்தவர் என்பதற்கு பொருத்தமானவர் கமல் என்று கூறியிருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது.





