இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். பல சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களை கொடுத்தவர். இப்போது இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் என்ற படத்தில் அவர் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நாயகியாக நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்யராஜூம் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்தி சினிமாவில் சல்மான்கான் போன்ற பெரிய நடிகர்கள் இருந்தாலும் மற்ற மொழிகளிலும் அவர்களுக்கு அங்கீகாரமும் அடையாளமும் வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். குறிப்பாக தமிழ் தெலுங்கு போன்ற பிறமொழி சார்ந்த ரசிகர்கள் மத்தியிலும் தங்களது நடிப்பு திறன் பாராட்டை பெற வேண்டும். தங்களது நடிப்பு அவர்களை கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.
அதே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகர்கள் ரஜினிகாந்த் சூர்யா விஜய் ராம்சரண் மகேஷ்பாபு சிரஞ்சீவி போன்றவர்களின் படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு ரிலீஸாகும்போது அந்த படங்களை இந்தி ரசிகர்கள் வெகுவாக ஆர்வமுடன் தியேட்டர்களுக்கு சென்று பார்க்கின்றனர். ஆனால் இந்தி ஹீரோக்கள் நடித்த படங்களை தமிழ் தெலுங்கு ரசிகர்கள் அவ்வளவாக கண்டுகொள்வது இல்லை.
இதுகுறித்து சிக்கந்தர் படம் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் சல்மான்கான் கூறியதாவது, ரஜினிகாந்த் சிரஞ்சீவி சூர்யா ராம்சரண் போன்ற நடிகர்களின் படங்கள் இங்கு வெளியாகும் போது நாங்கள் சென்று பார்க்கிறோம். அவை நன்றாக ஓடுகின்றன.
ஆனால் என் படங்கள் அங்கு வெளியாகும் போது அவர்களின் ரசிகர்கள் சென்று பார்ப்பதில்லை. என்னை பார்க்கும் போது ரசிகர்கள் பாய் பாய் என்கிறார்கள். ஆனால் என் படத்தை பார்க்க செல்வதில்லை. நாங்கள் இங்கு தமிழ் தெலுங்கு நடிகர்களை ஏற்றுக் கொள்வதைப் போல இந்தி நடிகர்களை அவர்கள் அங்கு ஏற்றுக் கொள்வதில்லை.
தமிழ் தெலுங்கு ரசிகர்களை திரையரங்குகளுக்கு இழுப்பது என்பது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. எனது வாழ்வில் நான் தென்னிந்திய தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஆனால் எனது படங்கள் தெற்கில் வெளியாகும் போது அவை அதே அளவிலான வெற்றியை பெறுவது இல்லை என்று நடிகர் சல்மான் கான் ஆதங்கமாக கூறியிருக்கிறார்.





