தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக, இயக்குநராக ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்தவர் சமுத்திரக்கனி. உன்னை சரணடைந்தேன் என்ற படத்தை 2003ல் இயக்கினார். இந்த படத்தில் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மகன் எஸ்பிபி சரண் ஹீரோவாக நடித்தார். அதைத் தொடர்ந்து தமிழில் பல படங்களை இயக்கினார் சமுத்திரக்கனி.
குறிப்பாக விஜயகாந்த் நடித்த நெறஞ்ச மனசு, நாடோடிகள், நாடோடிகள் 2, போராளி, தொண்டன், அப்பா, நிமிர்ந்து நில், வினோத சித்தன் ஆகிய படங்களை டைரக்ட் செய்தார். இதில் சில படங்களில் அவர் நடிக்கவும் செய்தார். இந்த படங்களும் ரசிகர்களுக்கு பிடித்துப் போனது. சமுத்திரக்கனியை நடிகராகவும் பிடித்துப் போனது.
இதையடுத்து சசிக்குமார் இயக்கத்தில் சுப்ரமணியபுரம், சாட்டை, நீர்ப்பறவை, ரஜினி முருகன், வேலையில்லா பட்டதாரி, விசாரணை, காலா, வடசென்னை, துணிவு, ஆர்ஆர்ஆர், ரைட்டர், பாயும்புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. வில்லன், குணச்சித்திரம் என எந்த கேரக்டரிலும் சமுத்திரக்கனி தனித்து தெரிந்தார். தன் திறனை வெளிப்படுத்தினார்.
சமீபத்தில் சமுத்திரக்கனி நடித்த யாவரும் நல்லவரே என்ற படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இந்த படத்தின் பிரமோவுக்காக நேர்காணல் ஒன்றில் சமுத்திரக்கனி பங்கேற்றார். அப்போது அவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்த தனது அனுபவங்களை நேரடியாக பகிர்ந்துக்கொண்டார்.
நான் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளேன். அந்த படத்தில் ஒரு கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என்று, அந்த படத்துக்கான கதையை எழுதும்போதே முடிவு செய்துவிட்டதாக, ஷங்கர் என்னிடம் கூறினார். அது எனக்கு மிகவும் பெருமையாக, சந்தோஷமாக இருந்தது. ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டிய நடிகர், தானாகவே செலக்ட் ஆகி விடுவார். அதற்காக எந்த முயற்சியும் அவர் எடுக்க வேண்டியது இல்லை.
இதே டைரக்டர் ஷங்கர், இந்தியன் படத்தை பல ஆண்டுகளுக்கு முன் இயக்கிய போது, நான் இந்த படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக நடிக்க ஆசைப்பட்டு வரிசையில் நின்றேன். அப்போது என் பெயரைக் கூட கேட்காமல், என்னை வேண்டாம் போ என விரட்டி விட்டனர். ஆனால் அதே டைரக்டர் ஷங்கர் இன்று என்னை அழைத்து நடிக்கச் சொல்கிறார். எனக்கான கேரக்டரை அவரே உருவாக்கி இருக்கிறார். இதைதான் விதி என்கிறோம், என்று கூறியிருக்கிறார் இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி.





