ஆரம்பத்தில் விஜய் டிவியில் லொள்ளு சபா காமெடி நிகழ்ச்சியில் நடித்துக் கொண்டிருந்தவர் சந்தானம். அவரை சினிமாவுக்குள் அழைத்து வந்தவர் நடிகர் சிம்புதான். தனது மன்மதன் வல்லவன் படங்களில் காமெடி ரோலில் சந்தானத்தை நடிக்க வைத்தார். சந்தானம் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி ரோலில் அசத்திய நடிகர் சந்தானம் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தார். பல படங்களில் இரட்டை ஹீரோக்களில் ஒருவராக அவர் மாறிவிட்டார். குறிப்பாக ஆர்யா ஜீவா கார்த்தி உதயநிதி ஸ்டாலின் ஜெயம் ரவி நடித்த படங்களில் சந்தானமும் ஒரு ஹீரோ அளவுக்கு படம் முழுவதுமே வருவார்.
தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்பு, உதயநிதி ஸ்டாலின் பல படங்களில் நடித்தார். குறிப்பாக ஒரு கல் ஒரு கண்ணாடி நண்பேன்டா இது கதிர்வேலன் காதல் போன்ற படங்களில் உதயநிதி ஸ்டாலினுடன் காமெடி ரோலில் சந்தானமும் நடித்திருந்தார். இது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
உதயநிதி ஸ்டாலின் திமுக தலைவர் ஸ்டாலின் மகன். அத்துடன் தமிழக முதல்வரின் ஒரே மகன். செல்வாக்கு மிக்கவர். அதனால் அவரது படங்களில் சந்தானம் நடித்த போது, மற்ற ஹீரோக்களை போல அவரிடம் அதிக நெருக்கம் காட்டி பழக முடியாது. குறிப்பாக ஆர்யா ஜீவா கார்த்தி ஜெயம் ரவி போன்றவர்கள் போல, பழக முடியாத நிலையில், தன்னுடைய அனுபவம் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சந்தானம் கூறியதாவது, நான் எந்த படம் பண்ணினாலுமே அந்த படத்துல என்னோட நடிக்கிற ஹீரோகிட்ட ஒரு ரிலேசன்ஷிப் வெச்சு கூப்பிடுவேன். ஆர்யாவை மச்சான் என்பேன். ஜீவாவை பிரதர் என்று அழைப்பேன். கார்த்தியை ஓய் என்பேன். அவரும் பதிலுக்கு என்னை ஓய் என்றுதான் கூப்பிடுவார்.
ஆனா உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்கும் போது மட்டும் அவரை எப்படி கூப்பிடறதுன்னே தெரியலை. ஏன்னா டக்குன்னு மாமா மச்சான்னு கூப்பிட முடியாது. அது மாதிரி இருக்கும் போது அவரை முதலாளின்னு கூப்பிட்டேன். அவரும் பதிலுக்கு முதலாளின்னு என்னை கூப்பிட்டார். அதில் இருந்து எங்க பிரண்ட்ஷிப் அப்படியே தொடருது என்று நடிகர் சந்தானம் அந்த விழாவில் கூறியிருக்கிறார்.





