மௌனம் பேசியதே ராம் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவான 3வது படம்தான் பருத்திவீரன். இந்த படம் கடந்த 2007ம் ஆண்டில் வெளியானது. முதலில் ஞானவேல் ராஜா தயாரிப்பதாக இருந்த இந்த படத்தை பிறகு இயக்குனர் அமீரே தயாரித்தார். இந்த படம் வெளியாகி பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது.
இந்த படத்தில் நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். முதலில் சூர்யா தான் இந்த படத்தில் நடிக்க இருந்தார். பிறகு கார்த்தி நடித்தார். இந்த படத்தில் முத்தழகு கேரக்டரில் கதாநாயகியாக நடித்த பிரியாமணிக்கு சிறந்த நடிகை தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
பருத்திவீரன் படத்தில் நாயகன் கார்த்திக்கு சித்தப்பா கேரக்டரில் நடிகர் சரவணன் நடித்திருந்தார். மேலும் பொன்வண்ணன் சுஜாதா கஞ்சா கருப்பு உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். நடிகர் கார்த்திக்கு முதல் படமே பெரிய அடையாளத்தை வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது.
ஆனால் இந்த படத்தில் நடித்த நடிகை பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தும் அடுத்தடுத்து தமிழில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதே போல் இந்த படத்தில் நடித்த நடிகர் சரவணனுக்கும் இந்த படம் பெரிய கம்பேக் தரவில்லை. இதற்கும் அவர் சிறப்பான நடிப்பை இதில் வெளிப்படுத்தி இருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சரவணன் கூறியதாவது, பருத்திவீரன் படம் மக்களுக்கு தான் சந்தோஷத்தை கொடுத்தது. எனக்கு ஒன்றுமே கொடுக்கவில்லை. அந்த படத்தில் நடித்த எனக்கு பணத்தையும் கொடுக்கவில்லை. வாழ்க்கையும் கொடுக்கவில்லை.
அந்த படத்தில் நடித்த பிறகு வந்த ரோல்கள் எல்லாமே அதே மாதிரியான ஒரு கேரக்டரிலேயே வந்தன. அப்படி நடிக்க முடியாமல் 17 ஆண்டுகள் நான் வீட்டில் சும்மா தான் உட்கார்ந்து இருந்தேன் என்று நடிகர் சரவணன் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். நடிகர் சரவணன் இப்போதும் சில படங்களில் அப்பா கேரக்டர்களில் நடித்து வருகிறார். ஆனால் பெரிய அளவில் அவரால் தமிழ் சினிமாவில் ஜெயிக்க முடியவில்லை.





