பருத்திவீரன் படத்தில் நடிகர் கார்த்தியின் சித்தப்பா கேரக்டரில் நடித்தவர் சரவணன். இப்போதும் அவரை பலரும் சித்தப்பா என்றுதான் அன்புடன் அழைத்து தங்களது பிரியத்தை வெளிப்படுத்துகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார்.
அப்போது, கல்லூரியில் நான் படித்த நாட்களில் அழகான பெண்களை உரசுவதற்கு என்றே நான் பஸ்களில் பயணித்திருக்கிறேன் என்று சரவணன் கூறினார். இது பார்வையாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து அவர் அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.
ஆரம்பத்தில் தாய் மனசு அபிராமி பார்வதி என்னை பாரடி என சில படங்களில் நாயகனாக நடித்த சரவணன் பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை. பருத்திவீரன் படத்துக்கு பிறகு பல படங்களில் வில்லன் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக கோலமாவு கோகிலா கடைக்குட்டி சிங்கம் ஜெயிலர் ராயன் என பல படங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சரவணன் கூறியதாவது, நான் சினிமாவில் நடிக்க வந்த போது எனக்கு 23 வயது. அப்போது எனக்கும் விஜயகாந்துக்கும் 18 வயசு வித்யாசம் இருந்தது. விஜயகாந்த் அப்போது நடிப்பில் உச்சத்தில் இருந்தார். ரஜினிக்கு அப்புறம் விஜயகாந்த் என்ற பெரிய இமேஜில் இருந்தார்.
நான் நடிக்க வந்த புதிதில் என்னை விஜயகாந்துடன் பலர் ஒப்பிட்டனர். அப்போது நான் அவர் எங்கேயோ இருக்கார். என்னைப் போய் அவர்கூட ஒப்பிடறீங்களே என்றுதான் சொல்வேன். என்னவோ தெரியலை அப்படி ஆகிவிட்டது. நான் விஜயகாந்த் மாதிரி இருக்கேன்னு சொன்னதுதான் நான் சினிமாவில் தோத்ததுக்கு முதல் காரணம்.
ஆனால் நான் விஜயகாந்த் மாதிரி எல்லாம் இல்லே. என்னுடைய கண்களும் தாடையும் பார்த்தால் விஜயகாந்த் மாதிரி இருக்கலாம். ஆனால் என் நடிப்பு வேற மாதிரி இருக்கும். நான் அவரை மாதிரி எல்லாம் நடிக்க மாட்டேன். அவருக்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது. நான் வேற மாதிரி பண்ணுவேன் என்று நடிகர் சரவணன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





