தமிழ் சினிமாவில் வில்லனாக கடந்த 1980களில் அறிமுகமானவர் சத்யராஜ். சட்டம் என் கையில் படத்தில் நடிகர் கமலுக்கு வில்லனாக நடித்தார். தொடர்ந்து பல படங்களில் ரஜினி கமல் விஜயகாந்த் போன்றவர்களுக்கு வில்லனாக நடித்த சத்யராஜ், கடலோர கவிதைகள் படம் வாயிலாக ஹீரோவாக மாறினார். பாரதி ராஜா இயக்கத்தில் ரேகா டீச்சராக நடித்த இந்த படம் சத்யராஜ் சினிமா பயணத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து திருமதி பழனிசாமி ரிக்ஷா மாமா பிரம்மா நடிகன் தாய் மாமன் வேலை கிடைச்சிடுச்சு தெற்கு தெரு மச்சான் வாழ்க்கை சக்கரம் உலகம் பிறந்தது எனக்காக அமைதிப்படை போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்த சத்யராஜ் முன்னணி நடிகராக மாறினார். கெளதமி குஷ்பு மீனா நக்மா ரோஜா போன்ற நாயகிகள் அவருக்கு ஜோடியாக நடித்தனர்.
சத்யராஜ் நடிப்பில் வேதம் புதிது படம், பெரியார் படம் அவரது சினிமா பயணத்தில் முக்கிய படங்களாக இருந்தது. அதே போல் பாகுபலி படத்தில் கட்டப்பா கேரக்டரும், ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் சத்யராஜின் பிரின்ஸிபால் கேரக்டரும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
ஆரம்பத்தில் கடவுள் பக்தி கொண்டவராக இருந்த சத்யராஜ், சினிமாவில் நடித்து இயக்குனர் மற்றும் நடிகர் மணிவண்ணனின் நெருங்கிய நட்புக்கு பிறகு நாத்திகவாதியாக மாறினார். குறிப்பாக பெரியார் கொள்கைகளை பின்பற்றும் பகுத்தறிவாளராக தன்னை காட்டிக் கொண்டார். ஆனால் சினிமாவில் அதை வெளிப்படுத்த மாட்டார்.
சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலூரில் பேசினார். அப்போது பெரியார் குறித்து சீமான் சர்ச்சைக்குரிய சில கருத்துகளை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இணையத்தில் பலரும் அவரை கடுமையாக விமர்சித்தும், கலாய்த்தும் வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சத்யராஜ் வெளியிட்ட ஒரு வீடியோவில், பெரியாருடைய திராவிட கருத்தியலில் உள்ள சமூக நீதிக் கோட்பாட்டின் உண்மையான விளக்கத்தை பொது மேடைகளில் சொல்லி, அதில் இந்த மாதிரி குறைகள் இருக்கிறது. நாங்கள் வந்தால் இதையெல்லாம் மாற்றிக் காட்டுவோம் என்று பேசுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் ஏதோ அரசியல் பண்ண வேண்டும் என்பதற்காக பெரியாருக்கு எதிராக புலம்புவர்களை பார்த்து கோபமே வரவில்லை. பரிதாபமாகத்தான் இருக்கிறது. பல கட்சிகளின் பெயரிலேயே திராவிடம் என்ற சொல் இருக்கிறது என்று சத்யராஜ் அதில் கூறியிருக்கிறார்.





