நடிகர் சூர்யா, நடிகர் சிவக்குமாரின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். துவக்கத்தில் அவரது நடிப்பு, பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. பூவெல்லாம் கேட்டுப்பார், நேருக்கு நேர் படங்களை பார்த்த ரசிகர்கள், ஸ்கூல் பையன் மாதிரி இருக்கிறார் என்றுதான் கமெண்ட் செய்தனர். கேமரா முன் நிற்கவோ, நடிக்கவோ தெரியாமல், நடனம் வராமல் ஆரம்பத்தில் தவித்தவர்தான் சூர்யா.
ஆனால் இயக்குனர் அமீர் இயக்கத்தில், சூர்யா வேறொரு பரிமாணத்தில் இருந்தார். அவருக்கு அப்படி நடிக்க கற்றுக்கொடுத்தவர் அமீர். அந்த படத்தில்தான் சூர்யா நடிகராக மாறினார். அந்த படத்தை பார்த்தாலே, அமீரின் உழைப்பு சூர்யாவின் நடிப்பில் தெரியும். அந்த படத்தை பார்த்த பிறகுதான். சூர்யா தேறி விடுவார் என சிவக்குமாருக்கே நம்பிக்கை வந்திருக்கிறது.
அதன்பிறகு சூர்யாவுக்கு மற்றொரு திருப்புமுனை படமாக அமைந்தது, இயக்குனர் பாலா இயக்கிய நந்தா படம்தான். முதலில் அமீர் படத்தில் நடிகராக மாறிய சூர்யாவை, இந்த படத்தில் ஹீரோவாக மாற்றியவர் டைரக்டர் பாலா தான். அதிலும் ஆக்ஷன் ஹீரோவாக இந்த படத்தில் செமையான நடிப்பை தந்திருந்தார் சூர்யா. ராஜ்கிரண் நடிப்பும் வேற லெவலில் இருந்தது.
சமீபகாலமாக சூர்யாவின் படங்கள் சரியாக போவதில்லை. கடைசியாக சுதா கொங்காரா இயக்கிய சூரரைப் போற்று படமும், தசெ ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படங்கள் மட்டுமே சூர்யாவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்த படங்களாக இருந்தன. ஆனால் நல்ல இயக்குனர்களின் படங்களில் கமிட் ஆகி பின் வெளியேறுவது சமீபமாக சூர்யாவிடம் அதிகரித்துள்ளது.
டைரக்டர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் சில வாரங்கள் நடித்துவிட்டு பின்பு, அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். பிறகு, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க கமிட் ஆகி விட்டு, பிறகு விலகி விட்டார். அதன்பிறகு சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருந்த புறநானூறு படத்தில் இருந்தும் விலகியிருக்கிறார்.
இப்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனது 44வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இது நடிகர் விஜய்க்கு சொல்லப்பட்ட கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கார்த்திக் சுப்பராஜ், சூர்யா காம்பினேஷன் ஒர்க் அவுட் ஆகுமா, ஷூட்டிங்கை துவங்குவார்களா, அல்லது விரைவில் கூட்டறிக்கை வெளியிட்டு பெஸ்ட் ஆக இந்த படத்தை தர, கால அவகாசம் தேவையாக உள்ளது என, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தருவார்களா, என்பதுதான் தமிழ் சினிமா ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.





