தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இப்போது அவர் தனது 69 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்குகிறார். பிரகாஷ்ராஜ் கௌதம் மேனன் பாபி தியோல் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ பிரியாமணி நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி பையனூரில் துவங்கியது.
வருகிற 2025ம் ஆண்டில் மார்ச் மாத இறுதிக்குள் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு முழு நேரமும் தனது அரசியல் பணிகளில் ஈடுபட நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராக உள்ள நடிகர் விஜய் கடந்த அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்னும் கிராமத்தில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
இந்த மாநாட்டில் 48 நிமிடங்கள் தொடர்ச்சியாக பேசிய தலைவர் விஜயின் ஆவேசமான பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. தனது கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகள் எதிர்கால திட்டங்கள் குறித்து தெளிவாக அறிவித்த விஜய் என்னுடைய அரசியல் எதிரி தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக தான் என்பதையும் பகிரங்கமாக அறிவித்தார்.
எனினும் விஜய் சொன்ன கருத்துக்களுக்கு எதிர்கருத்து தெரிவிக்காமல் ஆளுங்கட்சியான திமுக அமைதி காத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மாநாட்டில் திரண்ட பல லட்சக்கணக்கான மக்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு எதிராக சொல்லப்படும் ஒவ்வொரு விமர்சனமும் அது தங்களுக்கு எதிராக திரும்பும் என்பதை புரிந்து கொண்ட அனுபவமிக்க திமுக மௌனம் காத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் தற்போது தளபதி 69 படப்பிடிப்பில் விஜய் பங்கேற்று நடித்து வருகிறார். சென்னை பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் அடிக்கடி நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பூத் கமிட்டிக்கு நிர்வாகிகள் நியமிப்பது உள்ளிட்ட பணிகளிலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதற்கிடையே நேற்று சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளின் பயிற்சி பள்ளிக்கு நடிகர் விஜய் நேரில் சென்று கலந்துரையாடினார். அப்போது ராணுவ வீரர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தாரும் விஜயை நேரில் சந்தித்துள்ளனர். ராணுவ வீரர்களுடன் விஜய் நடத்திய சந்திப்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் அமரன் படம் வெளியாகி பெரிய அளவில் மக்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்த சூழலில் ராணுவ வீரர்களை நடிகர் விஜய் சந்தித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





