தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் சிம்பு முதன்முறையாக இணைந்து நடித்த தக்லைப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. சிம்பு நடிப்பில் பத்துதல படம் வெளியான பிறகு இந்த படம் 2 ஆண்டுகள் கழித்து திரைக்கு வருவதால் சிம்பு ரசிகர்கள் பலத்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கடந்த 3ம் தேதி நடிகர் சிம்பு தனது 42வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவரது 49வது படம் 50வது படம் மற்றும் 51வது படம் குறித்த முக்கிய அப்டேட்டுகள் வெளியானது. இதில் சிம்புவின் 49வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிக்க அதிக வாய்ப்புள்ளது.
தேசிங்கு பெரியசாமி டைரக்ட் செய்யும் சிம்புவின் 50வது படத்தை, சிம்புவே சொந்தமாக தயாரிக்கிறார். அட்மின் சினி ஆர்ட்ஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் துவங்கிய சிம்பு, தனது 50வது படத்தை அவரே தயாரிக்கிறார். சிம்புவின் 51வது படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்ய உள்ளார்.
நடிகர் சிம்புவின் தம்பி குறளரசன் மற்றும் தங்கை இலக்கியாவுக்கு திருமணாகி அவர்களுக்கு பிள்ளைகளும் பிறந்து விட்டது. அதனால் மாமா பெரியப்பா ஆன நிலையில், இன்னும் சிம்பு முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார். திருமணம் குறித்து யாராவது கேள்வி கேட்டால், அது நடக்கும் போது நடக்கட்டும் என்றுதான் சிம்பு கூறி வருகிறார்.
இந்நிலையில் ஒரு விழா மேடையில் பங்கேற்று பேசிய நடிகர் சிம்பு கூறியதாவது, யூத்தா இருக்கிறவங்களுக்கு எல்லாம் அட்வைஸ் சொன்னாலே புடிக்காது. பொதுவா அட்வைஸ் பண்றது யாருக்கும் பிடிக்காது. இருந்தாலும் நான் ஒரு அட்வைஸ் சொல்றேன். அந்த அட்வைஸ் என்னன்னா, எவன் அட்வைஸையும் கேட்காதீங்க, அதுதான் நான் சொல்ற அட்வைஸ்.
இந்த அட்வைஸ் பண்றவங்களை எல்லாம் பார்த்தீங்கன்னா, அவன் வாழ்க்கைக்கு அவன் அட்வைஸ் பண்ணியிருந்தா அவன் எங்கேயோ போயிருப்பான். அவனால் அது முடியலைன்னு தான் உங்களுக்கு அட்வைஸ் பண்றான் என்று சிலம்பரசன் அட்வைஸ் செய்து பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.





